Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

6.16 லட்சம் தடுப்பூசிகள் இன்று தமிழகம் வருகிறது

ஜுன் 15, 2021 11:50

சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-ம் அலை வேகமாக பரவி கடந்த மாதம் உச்சத்தை தொட்டது. பல்வேறு மாநிலங்களில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனாவை தடுக்க தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள மக்கள்தொகையில் இதுவரை 9 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் தடுப்பூசி பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசிகள் வீணானது. தற்போது தடுப்பூசி போட பொதுமக்கள் இடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் தடுப்பூசி மையங்களில் குவிந்து வருகிறார்கள். ஆனால் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. முதல் டோஸ் போட்டவர்கள் 2-வது டோஸ் போட தடுப்பூசி இல்லாமல் காத்திருக்கிறார்கள்.

இதையடுத்து கொரோனா தடுப்பூசி அதிக அளவில் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இதையடுத்து மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து கடந்த 11-ந்தேதி 3.65 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்தன. அவை தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று மேலும் 6.16 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வருகிறது. ஐதராபாத்தில் இருந்து 1 லட்சத்து 19 ஆயிரத்து 20 கோவேக்சின் தடுப்பூசிகளும், புனேயில் இருந்து 4 லட்சத்து 97 ஆயிரத்து 640 கோவிஷீல்டு தடுப்பூசிகளும் இன்று தமிழகம் வருகிறது. இந்த தடுப்பூசிகள் தமிழகம் முழுவதும் பிரித்து அனுப்பப்படுகிறது. தடுப்பூசி மையங்களில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
 

தலைப்புச்செய்திகள்