Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிளஸ்-2 மதிப்பெண் வழங்கும் குழுவில் 3 தலைமை ஆசிரியர்கள்

ஜுன் 15, 2021 11:54

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து அரசுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்குவதற்காக பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை, சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்படும்.

அவர்கள் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு இறுதி தேர்வு மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்த குழுவில் தலைமை ஆசிரியர்கள் பிரிவில் அரசு, உதவி பெறும் பள்ளி, சுயநிதி பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோற்பவமேரி, திருநெல்வேலி சங்கர் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், சென்னை ஆழ்வார்திருநகர் செயின்ட்ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜேம்ஸ்சத்தியராஜ் ஆகியோர் பிளஸ்-2 வகுப்புக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்குவது சார்ந்து அமைக்கப்பட்ட குழுவுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட தலைமை ஆசிரியர்கள் பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் தெரிவித்து, குழுவின் தலைவரால் வழங்கப்படும் பணிகளை உடனுக்குடன் மேற்கொண்டு ஆலோசனை கூட்டங்களில் தங்களின் கருத்துக்களை வழங்க வேண்டும் என்றார்.
 

தலைப்புச்செய்திகள்