Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் நிறுத்தம்

ஜுன் 16, 2021 11:33

தஞ்சாவூர்: கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பயணத்தை கருத்தில் கொண்டு கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் தஞ்சையில் இருந்து சென்னைக்கு இரவு நேரத்தில் இயக்கப்பட்டு வந்தது.

தஞ்சையில் இருந்தும் தஞ்சை வழியாகவும் 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து பயணிகள் ரெயில் இன்று வரை இயக்கப்படவில்லை. தற்போது தஞ்சையில் இருந்தும் தஞ்சை வழியாகவும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில், சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில், ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில், மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய 4 ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

வேறு எந்த பொது போக்குவரத்தும் இல்லாத நிலையில், உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இந்ம நிலையில், இன்று (புதன்கிழமை) முதல் ஜூலை 1-ந் தேதி வரை உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்படுவதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகள் கூட்டம் குறைவாக இருப்பதாக கூறி இந்த ரெயில் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது தஞ்சை, கும்பகோணம் பகுதி பொதுமக்களுக்கு பெரிதும் பயனளித்து வந்த இந்த ெரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ெரயில் உபயோகிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ரெயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன் கூறுகையில், கொரோனா ஊரடங்கால் மே 1-ந் தேதி முதல் தஞ்சை வழியாக இயக்கப்பட்ட சோழன், செந்தூர் உள்ளிட்ட சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்பட்டு, உழவன் ரெயில் மட்டுமே இயக்கப்பட்டது. இரவு நேரத்தில் இந்த ரெயில் இயக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு பெரிதும் பயன் அளித்து வந்தது. இந்த ரெயிலில் முன்பதிவும் அதிகளவு செய்யப்பட்டு பொதுமக்கள் பயணம் செய்து வந்தனர்.

தற்போது தெற்கு ரயில்வே நிர்வாகம் உழவன் ரெயிலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. சோழன், செந்தூர் பகல் நேர விரைவு ரெயில்கள் சென்னைக்கு 16-ந் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் பயணம் செய்வதை காட்டிலும் இரவு நேர பயணத்தையே பொதுமக்கள் விரும்புவார்கள். மேலும், செந்தூர் விரைவு ரெயில் திருச்செந்தூரில் இருந்தும், சோழன் விரைவு ரெயில் திருச்சியில் இருந்தும் இயக்கப்படுவதால், தஞ்சை, கும்பகோணம் பகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் முன்பதிவுக்கான இருக்கைகளின் எண்ணிக்கை குறைவாகும். எனவே, தஞ்சை மாவட்ட மக்களுக்கு பெரிதும் பயனளித்து வந்த உழவன் விரைவு ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்றார்.
 

தலைப்புச்செய்திகள்