Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுவை சட்டமன்றம் கூடியது- சபாநாயகராக செல்வம் பதவியேற்றார்

ஜுன் 16, 2021 01:13

புதுச்சேரி: புதுவை சட்டமன்ற சபாநாயகர் தேர்தல் கடந்த 12-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே வேட்புமனு தாக்கலும் தொடங்கியது. என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணியில் மணவெளி தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஏம்பலம் செல்வம் சபாநாயகர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். ஏம்பலம் செல்வம் கடந்த 14-ந் தேதி தனது வேட்புமனுவை சட்டசபை செயலர் முனிசாமியிடம் தாக்கல் செய்தார்.

இதையும் படியுங்கள்...புதுவை சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் போட்டியின்றி தேர்வு நேற்று மதியம் 12 மணியுடன் வேட்புமனுதாக்கல் காலக்கெடு முடிந்தது. எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்புமனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் சபாநாயகராக ஏம்பலம் செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சபாநாயகர் தேர்வை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. தமிழ்தாய் வாழ்த்துடன் சபை கூடியது.

தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார். முதல் நிகழ்வாக, சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், முன் மொழிந்தவர், வழிமொழிந்தவர் என தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்கள் விவரத்தை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன், ஒரு உறுப்பினரே மனு செய்துள்ளதால் போட்டியின்றி ஏம்பலம் செல்வம் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் சபாநாயகர் இருக்கைக்கு வரும்படி ஏம்பலம் செல்வத்துக்கு அழைப்பு விடுத்தார். அவை முன்னவரும், முதல்-அமைச்சருமான ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர், ஏம்பலம் செல்வத்தை அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். தொடர்ந்து கூட்டணி கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரை வாழ்த்தி பேசினர். முதல்-அமைச்சர் ரங்கசாமியும், சபாநாயகரை வாழ்த்தி பேசினார். இறுதியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஏற்புரையாற்றினார்.

இதையடுத்து சபையின் இன்றைய அலுவல்கள் அனைத்தும் நிறைவுபெறுவதாக கூறி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சபையை காலவரையின்றி ஒத்திவைத்தார்.

தலைப்புச்செய்திகள்