Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏழை தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு- மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

ஜுன் 16, 2021 01:27

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும், கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதை அறிந்து கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். முதல் முதலாக கையெழுத்திட்ட 5 உத்தரவுகளில் இதுவும் ஒன்று. முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்து அதன்படி வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரம் கருணாநிதி பிறந்த தினத்தன்று வழங்கப்படும் என்று அறிவித்தார். கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி அன்று கொரோனா நிவாரண நிதி 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்துடன் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத 14 மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தையும்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் படி நேற்று தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரமும், 14 மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டன. ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகைப் பொருட்களை பெற்றுக்கொண்ட தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் நியாய விலைக் கடைகளை விட்டு வெளியே வந்தனர். இப்படி ரூ.2 ஆயிரம் பெற்றுக் கொண்டு வெளியே வந்த மூதாட்டிகளின் சிரிப்பு இணைய தளம், தொலைக்காட்சிகளில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டுள்ளது. ரூ.2 ஆயிரம் பெற்றதும், ‘இதைவிட வேறு மகிழ்ச்சி எங்களுக்கு இல்லை’ என்று சொல்வதைப் போன்று இருந்தது அந்த மூதாட்டிகளின் சிரிப்பு.

இப்படக்காட்சிகள் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உள்ளத்தை தொட்டது. அதனை அவர் மகிழ்ச்சியுடன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அம்மூதாட்டிகளின் புகைப்படத்தை வெளியிட்டு, “இந்த ஏழைத் தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு”- என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்