Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பி.எப்., கணக்கில் ஆதார் இணைக்க வேண்டுகோள்

ஜுன் 16, 2021 01:29

திருப்பூர்: தொழிலாளர் தங்கள் பி.எப்., கணக்கில் இருந்து பணத்தை பெறும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஆன்லைன் சேவைகளை முழுமையாக பயன்படுத்தவும், முறைகேடுகளை தடுக்கும் வகையிலும் தொழிலாளர்கள் தங்கள் பி.எப்., கணக்குடன் வங்கி கணக்கு, ஆதார் இணைப்பது அவசியமாகிறது. மேலும் ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இம்மாதம் முதல் தொழிலாளரின் பி.எப்., கணக்கில் தொகை செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி பகுதிகளை உள்ளடக்கி திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகம் இயங்குகிறது.

இந்த அலுவலகத்துக்கு உட்பட்டு 2.15 லட்சம் தொழிலாளர் பயனாளிகளாக உள்ளனர். இவர்களில் 10,000 பேர் தங்கள் கணக்கில் இன்னும் ஆதார் எண் இணைக்கவில்லை. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட பி.எப்., கமிஷனர் விஜய் ஆனந்த் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் 1,480 நிறுவனங்களை சேர்ந்த 10, 590 பேர்  பி.எப்., கணக்கில் ஆதார் இணைக்காமல் உள்ளனர். இவர்களது பி.எப்., கணக்கில் இம்மாதம் முதல் தொகை செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் தொழிலாளர்களின் பி.எப்., கணக்கில் விரைந்து ஆதார் இணைக்க தேவையான உதவிகளை செய்ய வேண்டும். ஆதார், பி.எப்., விவரங்களில் எவ்வித முரண்பாடும் இல்லாதபட்சத்தில்  எளிதாக இணைப்பு முடிவடைந்துவிடும். பிறந்த தேதியில் மாறுபாடு, பெயரில் சிறிய மாற்றங்கள் இருந்தால் ஆன்லைன் சேவையை பயன்படுத்தி பி.எப்., விவரங்களில் மாற்றம் செய்துகொள்ளலாம். 

பிறந்த தேதியில் 3 ஆண்டுக்கு மேல் மாறுபாடு, பெயரில் பெரிய அளவிலான முரண்பாடுகள் இருப்பின் தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்துடன் இணைந்து உரிய ஆவணங்களை இணைத்து மாவட்ட பி.எப்., அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்