Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிவசங்கர் பாபா ஆன்மிகத்துக்கு தாவியது எப்படி?

ஜுன் 17, 2021 11:18

லண்டனில் பட்ட மேற்படிப்பு படித்து தொழில் அதிபராக வலம் வந்த சிவசங்கர் பாபா ஆன்மிகவாதியாக மாறியது எப்படி? என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. பாலியல் புகாரில் போக்சோ வழக்கில் சிக்கி கைதாகி உள்ள சிவசங்கர் பாபாவின் வாழ்க்கை வரலாறு மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது. இவருக்கு தற்போது 72 வயது ஆகிறது. அன்றைய வேலூர் மாவட்டம், இன்றைய திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள ஆலங்காயம் கிராமம் இவரது பிறந்த ஊர்.

இவரது தந்தை நாராயணசர்மா. தாயார் விஜயலட்சுமி. சென்னை பல்கலைக்கழகத்தில் வேதியியல் பட்டப்படிப்பு படித்து விட்டு, லண்டனில் பட்ட மேற்படிப்பு படித்துள்ளார். அதன்பிறகு பல்வேறு தொழில்கள் செய்து தொழில் அதிபராகவே இருந்துள்ளார்.

இவரது இன்னொரு பக்கம் தலைசிறந்த ஆன்மிகவாதி. வேலூர் ரத்தினகிரி முருகனின் பக்தர். அய்யப்ப பக்தரும் கூட. சபரிமலைக்கும், கைலாச மலைக்கும் பலமுறை சென்றுள்ளார். தான் வசிக்கும் வீடு அருகே ஐயப்பன் கோவில் ஒன்றை கட்டியுள்ளார். இலவச மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் செய்து வந்தார். இவர் நாளடைவில் தன்னை கடவுளாக சித்தரிக்க ஆரம்பித்தார். அதுதான் இவரை தடம்புரள வைத்ததாக கூறப்படுகிறது.

இவருடைய பள்ளிக்கூடம் 62 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த இடம் அரசு புறம்போக்கு நிலமா என வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அதன் வளாகத்திலேயே இவரது வீடும் உள்ளது. கைதான சிவசங்கர் பாபா முன்னிலையில் மீண்டும் அவரது வீட்டில் சோதனை போட போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்