Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாட்டிலேயே முதல் முறையாக மத்திய பிரதேசத்தில் கரோனாவிலிருந்து மீண்டவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு

ஜுன் 17, 2021 12:05

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் கரோனாவிலிருந்து மீண்டவருக்கு நாட்டிலேயே முதல் முறையாக பச்சைபூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டது. இது முகம், மூக்கு, கண் அல்லது மூளையை பாதிக்கிறது. இதனால் பார்வையிழப்பு ஏற்படவும் நுரையீரலுக்கு பரவவும் வாய்ப்பு உள்ளது. பின்னர் சிலருக்கு மஞ்சள், வெள்ளை பூஞ்சை பாதிப்பும் ஏற்பட்டது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரவிந்தோ இன்ஸ்டிடியூட் ஆப் மெடிகல் சயின்சஸ், இதய நோய்கள் துறை தலைவர் டாக்டர் ரவி தோசி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் 2 மதங்களாக சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டார். 2 வாரங்கள் ஆன நிலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதுடன் மூக்கில் ரத்தம் வடிந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த அவருக்கு கருப்புபூஞ்சை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதினோம்.

ஆனால் பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு பச்சை பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வகை பாதிப்பு ஏற்பட்டிருப்பது நாட்டிலேயே முதல் முறையாக இருக்க வாய்ப்புள்ளது. பச்சை பூஞ்சை என்பது அஸ்பெர்ஜில்லோசிஸ் தொற்று ஆகும். இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். மிகவும் அரிதாக ஏற்படும் இந்த நோய் நுரையீரலையும் தாக்கும். கருப்பு பூஞ்சை மற்றும் பச்சை பூஞ்சையை குணப்படுத்தும் மருந்துகள் வெவ்வேறானவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பூஞ்சை நோய் எந்தெந்த உடல்பாகத்தை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை தனித்தனியாக அடையாளம் காணவே வண்ணங்களின் பெயரால் இந்த நோய் அழைக்கப்படுகிறது என டெல்லி எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்