Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீன ராணுவத்துடனான மோதலின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு கல்வான் பள்ளத்தாக்கு பற்றிய பாடலை வெளியிட்டது இந்திய ராணுவம்

ஜுன் 17, 2021 12:08

புதுடெல்லி:கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு வீடியோவுடன் கூடிய ஒரு பாடலை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி கிழக்கு லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய -சீன ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இதனிடையே எல்லைப்பிரச்சினையை தீர்க்க இரு நாடுகளும் ராணுவ உயர் அதிகாரிகள் நிலையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவம் நடந்து ஓராண்டு முடிவடைந்துள்ளது. இதை முன்னிட்டு, இந்த மோதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ‘கல்வான் கே வீர்’ என்ற தலைப்பில் வீடியோவுடன் கூடிய ஒரு பாடலைஇந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. பிரபல பாடகர் ஹரிஹரன் பாடியுள்ள இந்தப் பாடல், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை பாதுகாக்கும் இந்திய வீரர்களின் துணிச்சலை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. மலைப்பகுதியில் சவால் ஏற்படும்போது ஹீரோக்கள் விழித்தெழுவார்கள் என்ற வரிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

சுமார் 5 நிமிடங்கள் ஓடும் இந்தப் பாடலின் நடுவே, லடாக் மலைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்கள், அவர்களுக்கு வழங்கும் பயிற்சி, கண்காணிப்புப் பணி ஆகிய காட்சிகள் இடம்பெறுகின்றன. எந்த ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் அதை முறியடிக்க தேவையான போர் தளவாடங்களுடன் ராணுவம் தயார் நிலையில் உள்ளதை குறிக்கும் வகையிலான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
 

தலைப்புச்செய்திகள்