Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அடுத்த பெருந்தொற்றில் இருந்து உலகத்தை காக்க தயாராக வேண்டும்: விவாடெக் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

ஜுன் 17, 2021 12:09

புதுடெல்லி:அடுத்த பெருந்தொற்றில் இருந்து உலகத்தை காக்க தயாராக வேண்டும் என பாரிஸில் நடந்த விவாடெக் டிஜிட்டல் மற்றும் ஸ்டார்ட் அப் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். 2016 முதல் பாரிஸ் நகரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஐரோப்பாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மற்றும் ஸ்டார்ட் அப் நிகழ்ச்சிகளில் ஒன்றான விவாடெக்கில் சிறப்புரை ஆற்ற மதிப்புறு விருந்தினராக பிரதமர் அழைக்கப்பட்டிருந்தார். விவாடெக்கின் ஐந்தாவது பதிப்பில் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பல்வேறு துறைகளில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நெருங்கி பணியாற்றி வருவதாக தெரிவித்தார். அவற்றில் ஒத்துழைப்புக்கான வளர்ந்து வரும் துறைகளாக தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் விளங்குவதாக அவர் கூறினார்.

இத்தகைய ஒத்துழைப்பு மேலும் வளர்வது தற்போதைய தேவையாகும். அது நமது நாடுகளுக்கு மட்டும் உதவாமல் ஒட்டு மொத்த உலகத்திற்கும் உதவும், பிரெஞ்சு ஓபன் விளையாட்டு போட்டிக்கு தொழில்நுட்ப ஆதரவை இன்ஃபோசிஸ் வழங்குவதையும், அட்டோஸ், கேப்ஜெமினி போன்ற பிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியாவின் டிசிஎஸ் மற்றும் விப்ரோ ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டையும், இருநாடுகளின் தகவல்தொழில்நுட்ப திறமைகள் நிறுவனங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சேவையாற்றி வருவதற்கான உதாரணமாக குறிப்பிட்டார்.

வழக்கமான நடைமுறைகள் உதவாத போது புதுமைகள் உதவும் என்று பிரதமர் குறிப்பிட்டார். ‘‘பெருந்தொற்றின் போது நிலைமையை சமாளிக்கவும், தகவல் தொடர்புக்கும், வசதிக்கும், ஆறுதலுக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம் நமக்கு உதவியது. இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக உயிரி-அளவீட்டு டிஜிட்டல் அடையாள அமைப்பான ஆதார் சரியான நேரத்தில் ஏழைகளுக்கு நிதியுதவி சென்றடைய உதவியது.

800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவையும், பல வீடுகளுக்கு சமையல் எரிவாயு மானியங்களையும் எங்களால் வழங்க முடிந்தது. மாணவர்களுக்கு உதவுவதற்காக ஸ்வயம் மற்றும் திக்ஷா என்ற இரண்டு டிஜிட்டல் கல்வி திட்டங்களை வெகு விரைவாக எங்களால் தொடங்க முடிந்தது" என்று பிரதமர் கூறினார்.

பெருந்தொற்றின் சவாலை சமாளிக்க ஸ்டார்ட்அப் துறை சிறப்பான பங்காற்றியதாக பிரதமர் பாராட்டினார். ‘‘தனிநபர் பாதுகாப்புக் கவச உடைகள், முகக் கவசங்கள், பரிசோதனை கருவிகள் ஆகியவற்றுக்கான தேவையை சமாளிக்க தனியார் துறை முக்கிய பங்காற்றியது. தொலை மருத்துவ முறைக்கு மருத்துவர்கள் விரைந்து தங்களை தயார்படுத்திக் கொண்டு கோவிட் மற்றும் கோவிட் சாரா பிரச்சனைகளை காணொலி மூலம் தீர்த்தனர்.

இரண்டு தடுப்பு மருந்துகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் சில தடுப்பு மருந்துகள் பரிசோதனை அளவில் உள்ளன. தொடர்பு கண்டறிதலில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப தளமான ஆரோக்கிய சேது சிறப்பான பங்காற்றியது. பல லட்சக்கணக்கானோர் தடுப்புமருந்து பெறுவதற்கு கோவின் டிஜிட்டல் தளம் உதவியுள்ளது’’ என்று பிரதமர் தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் சூழலியல்களில் இந்தியாவும் ஒன்று என்று கூறிய பிரதமர், கடந்த சில வருடங்களில் பல சிறப்பான நிறுவனங்கள் உருவாகி உள்ளதாக தெரிவித்தார். கண்டுபிடிப்பாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் என்ன தேவையோ அதை இந்தியா வழங்குகிறது.

திறமை, சந்தை, மூலதனம், சூழலியல் மற்றும் திறந்தவெளி கலாச்சாரம் ஆகிய ஐந்து தூண்களின் அடிப்படையில் இந்தியாவில் முதலீடு செய்ய உலகத்தை நான் வரவேற்கிறேன் என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் திறமைவாய்ந்த பணியாளர்கள், கைபேசியின் பயன்பாடு, 775 மில்லியன் இணையப் பயனர்கள், உலகத்திலேயே குறைந்த விலையில் இன்டர்நெட் மற்றும் சமூக வலைதளங்களின் அதிக பயன்பாடு ஆகிய சாதகமான அம்சங்களை குறிப்பிட்டு முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு பிரதமர் வரவேற்றார்.

அதிநவீன பொது டிஜிட்டல் உள்கட்டமைப்பு, 156000 கிராம சபைகளை இணைக்கும் வகையில் 523000 கிலோமீட்டர்களுக்கு கம்பிவட இணைப்பு மற்றும் நாடு முழுவதும் பொது வை-ஃபை வசதிகள் ஆகியவற்றையும் பிரதமர் குறிப்பிட்டார். புதுமைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு சாதகமான கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் குறித்தும் அவர் விளக்கினார்.

அடல் புதுமை இயக்கத்தின் கீழ் 7500 பள்ளிகளில் நவீன புதுமை ஆய்வகங்கள் செயல்படுவதாக பிரதமர் தெரிவித்தார். பல்வேறு துறைகளில் கடந்த ஒரு வருடமாக ஏற்பட்டு வரும் இடையூறுகள் குறித்து பேசிய பிரதமர், தடங்கல்களால் கவலையடைய தேவையில்லை, சீரமைத்தல் மற்றும் தயாராக இருத்தல் ஆகிய இரு தூண்களின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

"கடந்த வருடம் இதே நேரம் தடுப்பு மருந்தை எதிர்நோக்கி உலகம் காத்துக்கொண்டிருந்தது. இன்று நம்மிடம் சில தடுப்பு மருந்துகள் உள்ளன. இதே போன்று நமது சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார நிலையை நாம் செப்பனிட வேண்டும். சுரங்கங்கள், விண்வெளி, வங்கியியல், அணுசக்தி மற்றும் பல்வேறு துறைகளில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை இந்தியாவில் நாங்கள் செயல்படுத்தி உள்ளோம். பெருந்தொற்றுக்கு இடையிலும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் துடிப்பான நாடாக இந்தியா இருப்பதை இது காட்டுகிறது என்று மோடி கூறினார்.

அடுத்த பெருந்தொற்றில் இருந்து உலகத்தை காக்க வேண்டிய தேவை குறித்தும் அவர் வலியுறுத்தினார். சூழலியலை சீரழிக்காத நீடித்த வாழ்க்கை முறைகள் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். சவாலை எதிர்கொள்ள ஒற்றுமை உணர்வுடனும் மனிதம் சார்ந்த அணுகலுடனும் பணிபுரிவதற்கு ஸ்டார்ட்அப் சமூக தலைமை ஏற்க வேண்டும். ஸ்டார்ட்அப் துறை இளைஞர்களால் நிரம்பி உள்ளது. இவர்களுக்கு கடந்த கால சுமைகள் இல்லை.

உலகத்தின் மாற்றத்திற்கு சக்தியூட்ட சரியான நபர்கள் இவர்களே. சுகாதாரம், கழிவுகளின் மறுசுழற்சி உள்ளிட்ட சூழலியலுக்கு நட்பான தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் கற்பதற்கான புதிய கருவிகள் ஆகியவற்றின் மீது நமது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும்," என்று பிரதமர் கூறினார்.

பிரான்ஸும், ஐரோப்பாவும் இந்தியாவின் முக்கிய பங்குதாரர்கள் என்று பிரதமர் கூறினார். மே மாதம் போர்டோவில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் அதிபர் மாக்ரோனுடன் தமது உரையாடல்களை நினைவுக்கூர்ந்த பிரதமர், ஸ்டார்ட்அப் முதல் குவாண்டம் கணினியல் வரையிலான டிஜிட்டல் கூட்டு முக்கிய முன்னுரிமையாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

"புதிய தொழில்நுட்பத்தில் தலைமை வகிப்பது பொருளாதார வலிமை, வேலைவாய்ப்பு மற்றும் வளத்தை நோக்கி அழைத்துச் செல்லும் என்பதை வரலாறு காட்டியிருக்கிறது. ஆனால் நமது கூட்டு ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் சேவையாற்ற வேண்டும். பெருந்தொற்று நமது உறுதிக்கு மட்டுமில்லாமல் கற்பனைக்கும் சவால் விட்டுள்ளது. இன்னும் அதிக அளவில் அனைவரையும் ஒருங்கிணைத்து, கவனம் செலுத்தி அனைவருக்குமான நீடித்த எதிர்காலத்தை கட்டமைப்பதற்கான வாய்ப்பு இதுவாகும்" என்று பிரதமர் மோடி கூறினார்.

தலைப்புச்செய்திகள்