Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 3.54 லட்சம் பேருக்கு விலையில்லா புத்தகம் வழங்க நடவடிக்கை

ஜுன் 17, 2021 12:12

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரிஅரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு நேற்று விலையில்லா பாட புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் 3.54 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாடபுத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி முதல் அரசுப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பள்ளிக்கு வருகின்றனர். தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கரோனாவின் தாக்கம் முற்றிலும் குறையாத நிலையில், இக்கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், மாணவ, மாணவியருக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாட புத்தகங்கள் அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டன. இப்புத்தங்களை அந்தந்த பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் நேற்று தொடங்கியது.

இதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 3 லட்சத்து 54 ஆயிரத்து 687 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்துக்கான புத்தகங்கள், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியின் வழிகாட்டுதலின் படி, மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி மேற்பார்வையில், வட்டாரக் கல்வி அலுவலர்கள் நேரடியாக பாட புத்தகங்களை பிரித்து அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

தலைப்புச்செய்திகள்