Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழிற்சாலை கட்டுமான பணி தீவிரம்

ஜுன் 17, 2021 12:13

சென்னை:நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி கிராமத்தில் கடற்கரைஓரத்தில் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும், புதிய தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, நாள்தோறும் 100 மில்லியன் லிட்டர் கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக தென் சென்னை பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தமிழக அரசு ரூ.1,259 கோடி மதிப்பில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணிகளை, கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கியது.

இப்பணிகள் 2021-ம் ஆண்டில் நிறைவு பெற்று, குடிநீர் ஆலை செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதிய குடிநீர் ஆலையின் கட்டுமான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை நிறைவு செய்யும் வகையில், கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

புதிய ஆலையில் சுத்திகரிக்கப்படும் குடிநீர், மேடவாக்கம், வேளச்சேரி, ஆலந்தூர், பரங்கிமலை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, சோழிங்கநல்லூர், உள்ளகரம் - புழுதிவாக்கம், மடிப்பாக்கம் மற்றும் சிறுசேரியில் உள்ள சிப்காட் உள்ளிட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மேற்கண்ட பகுதிகளுக்கு, சுத்திகரிப்பு செய்யப்படும் குடிநீரை கொண்டு செல்வதற்காக, ஈசிஆர் சாலையோரம் ராட்சத குழாய் புதைக்கும் பணிகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 

தலைப்புச்செய்திகள்