Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

ஜுன் 17, 2021 12:18

சென்னை:பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த மே 7-ம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். முதல்வராக பதவி ஏற்பவர்கள் டெல்லி சென்று குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்திப்பது வழக்கம். தமிழகத்தில் கரோனா பரவல் அதிகமாக இருந்ததால் முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் தள்ளிப்போனது.

தற்போது கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று (ஜூன் 17) டெல்லி செல்வதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சந்தித்துப் பேசுகிறார். செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி தயாரிப்பு, நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் விவகாரம், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள மத்திய அரசு திட்டங்கள், கரோனா, கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் விவாதிக்கிறார். இது தொடர்பாக கோரிக்கை மனுவையும் அளிக்கிறார்.

அத்துடன், கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது குறித்த விவரங்களையும், பிரதமரிடம் முதல்வர் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு முடிந்ததும் பிரதமர் மோடியுடன் தனியாக சுமார் 10 நிமிடங்கள் முதல்வர் ஸ்டாலின் உரையாட இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பு அரசியல் நிலவரங்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நல்லிணக்கம் குறித்து இரு தலைவர்களும் தனியாக ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக, இன்று காலை 7.30 மணி அளவில் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து, தனி விமானத்தில் டெல்லி செல்லும் முதல்வரை, விமான நிலையத்தில் திமுக எம்.பி-க்கள், தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். முதல்வர் ஸ்டாலினுடன் விமானத்தில் அவருடைய தனிச்செயலாளர்கள் உதயச்சந்திரன், உமாநாத் உள்ளிட்ட ஒருசில முக்கிய அதிகாரிகள் மட்டுமே உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்