Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளிநாட்டிலுள்ள உறவினர்களுடன் நளினி, முருகன் பேச அனுமதி- ஐகோர்ட்டு உத்தரவு

ஜுன் 18, 2021 11:34

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, இவரது கணவர் முருகன் ஆகியோர் வேலூர் சிறையில் உள்ளனர். முருகனின் தாயார் இலங்கையிலும், சகோதரி லண்டனிலும் உள்ளனர். இவர்களுடன் ‘வாட்ஸ்அப் வீடியோ காலில்' பேச அனுமதிக்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் இருவரும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி வழங்காததால், சென்னை ஐகோர்ட்டில் நளினியின் தாயார் பத்மா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன், ‘வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் தமிழக சிறை கைதிகள் தொலைபேசியில் பேச எந்த ஒரு சட்டமும் தடையாக இல்லை. பிற கைதிகள் உறவினர்களுடன் பேச அனுமதிக்கும்போது, நளினிக்கும், அவரது கணவர் முருகனுக்கும் அதே உரிமை வழங்கப்பட வேண்டும்’ என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான அப்போதைய மாநில குற்றவியல் தலைமை அரசு வக்கீல் நடராஜன், ‘வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் தொலைபேசியில் பேச நளினி மற்றும் முருகனுக்கு அனுமதி வழங்க முடியாது. இதுவரை கைதிகள் யாருக்கும் இதுபோல அனுமதி வழங்கியது இல்லை. ஒருவருக்கு அனுமதி வழங்கினால் தமிழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான வெளிநாட்டு கைதிகள் அதே உரிமையை கேட்பார்கள் என்று வாதிட்டார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான அப்போதைய உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், ‘‘இந்திய சிறையில் உள்ள வெளிநாட்டு கைதிகளே வெளிநாடுகளில் உள்ள தங்களது உறவினர்களுடன் தொலைபேசியில் பேச அனுமதிப்பதில்லை என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. எனவே இவர்களுக்கு அனுமதி வழங்க முடியாது’’ என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் ‘‘இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த ஆண்டு உத்தரவிட்டனர். இந்த நிலையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் நேற்று தீர்ப்பு வழங்கினர்.

அதில், வெளிநாட்டிலுள்ள முருகனின் தாயார், சகோதரி ஆகியோரிடம் ‘வாட்ஸ்அப் வீடியோ காலில்' பேசுவதற்கு முருகன், நளினி ஆகியோருக்கு சிறைத்துறை அனுமதி வழங்க வேண்டும்’’ என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.

தலைப்புச்செய்திகள்