Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடந்த 7 ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து எவ்வளவு கருப்பு பணம் மீட்கப்பட்டது?: காங்கிரஸ் கேள்வி

ஜுன் 19, 2021 11:05

புதுடெல்லி : சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள நிதி, ஒரே ஆண்டில் ரூ.6 ஆயிரத்து 625 கோடியில் இருந்து ரூ.20 ஆயிரத்து 700 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லப் நேற்று காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கடந்த ஆண்டு 97 சதவீத இந்தியர்கள் ஏழைகளாகி விட்டதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. மற்றொரு புறம், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்த பணம் அதிகரித்துள்ளது. அவர்களுக்கு மட்டும் இந்த பேரிடரிலும் எப்படி வாய்ப்பு கிடைத்தது?

கடந்த 2014-ம் ஆண்டு ஏராளமான வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்த மோடி அரசு, கடந்த 7 ஆண்டுகளில் கருப்பு பணத்தை மீட்டு கொண்டுவர எடுத்த நடவடிக்கை என்ன? இதுபற்றியும், 7 ஆண்டுகளில் எந்த நாட்டில் இருந்து எவ்வளவு கருப்பு பணம் மீட்டு வரப்பட்டது என்பது பற்றியும் மோடி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும், சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்த பணம் எப்படிப்பட்டது?, அதை போட்டு வைத்துள்ள நபர்கள் யார் என்ற முழு விவரத்தையும் மோடி அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:- சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பண சதவீதம் அதிகரித்துள்ளது. 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவோம் என்று மோடி கூறிய வாக்குறுதி என்ன ஆனது?. இப்போது 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த பணத்தை மீட்க மனஉறுதி இல்லையா? அல்லது அது உங்கள் நண்பர்களின் பணமா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்