Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அடுத்த மாதத்தில் ஆதரவாளர்களை சந்திக்கும் சசிகலா

ஜுன் 19, 2021 12:07

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா சென்னை திரும்பிய போது தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று முதலில் தெரிவித்தார். அதன் பிறகு தேர்தல் சமயத்தில் திடீரென அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். இது சசிகலாவின் ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 65 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் ஆட்சியை இழந்தது. கட்சியில் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இடையே ஒற்றுமை இல்லாததே தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் போனதாக கட்சி நிர்வாகிகள் பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த சமயத்தில் அரசியலில் இருந்து விலகி இருந்த சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்காக கடந்த மாதம் முதல் தனது ஆதரவாளர்களை தொடர்பு கொண்டு தொலைபேசியில் அவர் பேசி வருகிறார். கட்சி அழிவதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. அ.தி.மு.க.வில் பொறுமையாக இருங்கள் என்று பேசி வந்தார். இதைத் தொடர்ந்து சசிகலாவுடன் பேசிய முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்பட 15 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர்.

சசிகலாவுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் மீறினால் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை கழகத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  இந்த நிலையில் கட்சி முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை காண்பிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சசிகலாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற அ.தி.மு.க. தலைமை உத்தரவிட்டிருந்தது.

அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு அதில் சசிகலாவை கண்டித்தும், அவருக்கு எதிராகவும் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே சசிகலா அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரத்தில் இருந்து தனது ஆதரவாளர்களை நேரடியாக சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கு தளர்வுடன் இயல்பு நிலை திரும்பியதும் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஆதரவாளர்களையும் சென்னைக்கு வரவழைத்து தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் சசிகலா சந்திக்க உள்ளதாகவும் அவரது நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

தலைப்புச்செய்திகள்