Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கல்வீச்சில் இருந்து தப்புவதற்காக பிளாஸ்டிக் ஸ்டூல், மூங்கில் கூடையுடன் சென்ற 4 போலீஸார் சஸ்பெண்ட்

ஜுன் 19, 2021 12:49

உத்தரபிரதேசம்:  உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள தேவிகேடா கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்த சென்ற போலீ ஸார் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். பொதுவாக, கலவரத்தை அடக்க செல்லும் போது போலீஸார் தற்காப்புக்காக பாதுகாப்புக் கவசங்களை எடுத்துச் செல்வர். இது, சமாதானப் பேச்சுவார்த்தைதானே என எண்ணிய போலீஸார் அதுபோன்ற கவசங்களை எடுத்துச் செல்லவில்லை எனத் தெரிகிறது. இதனால் கல்வீச்சில் போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது.

இதனைக் கண்ட கோட்வாலி காவல் நிலைய தலைமைக் காவலர் விஜய் குமார், காவலர் ராம் அஷ்ரீ ஆகியோர் அங்கு ஒரு வீட்டுக்கு முன்பு இருந்த பிளாஸ்டிக் ஸ்டூலினை எடுத்து தலைக்கவசமாகவும், மூங்கில் கூடையை உடல் கவசமாகவும் மாற்றிக் கொண்டனர். பின்னர் தடியடி நடத்தி கிராம மக்களை கலைந்து போக செய்தனர். இந்நிலையில், ஸ்டூலை தலையில் கவிழ்த்துக் கொண்டும், மூங்கில் கூடையை கையில் எடுத்துக் கொண்டும், போலீஸார் சென்ற புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலானது. போலீஸாரின் பாதுகாப்புக்காக கவசங்களை கூட உத்தர பிரதேச அரசு வழங்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, காவல் துறை டிஜிபி ஹித்தேஷ் சந்திரா அவாஸ்தியின் உத்தரவின்பேரில், பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக காவல் ஆய்வாளர் சந்திர மிஸ்ரா, உதவிக் காவல் ஆய்வாளர் அகிலேஷ் குமார், தலைமைக் காவலர் விஜய் குமார், காவலர் ராம் அஷ்ரீ ஆகியோர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தலைப்புச்செய்திகள்