Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உத்தரபிரதேச காவல் துறையில் திரைப்பட பாணியில் மோசடி: சகலையின் காவல் பணியில் 5 வருடமாக தொடர்ந்தவர் கைது

ஜுன் 20, 2021 01:04

உத்தரபிரதேசம்:  உத்தரபிரதேசம் காவல்துறையில் திரைப்பட பாணியில் மோசடிநடைபெற்றுள்ளது. தனது சகலையின் காவல் பணியில் ஆள்மாறாட்டம் செய்து தொடர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் ‘வேட்டை’ எனும் திரைப்படம் வெளியானது. இதில், பயந்த சுபாவம் கொண்ட மூத்த சகோதரர் மாதவனுக்கு காவல் பணி கிடைக்கும். ஆனால், இவருக்கு அடிதடி மோதல் வரும் சூழலில் அவரது தம்பியான ஆர்யா வந்து வில்லன்களுடன் மோதி கைது செய்ய உதவுவார். சட்டவிரோதமான இச்செய்கையை இறுதியில் நியாயப்படுத்தி ஆர்யாதண்டிக்கப்படுவதும் இல்லை. இதே வகையில் ஒரு ருசிகர மோசடி உ.பி.யின் முராதாபாத்தின் காவல் துறையில் நடைபெற்றுள்ளது.

உபியின் முசாபர்நகரை சேர்ந்த அணில்குமார் என்பவருக்கு அம்மாநிலக் காவல்துறையில் கடந்த 2011-ல் கான்ஸ்டபிள் பணி கிடைத்துள்ளது. பரேலியில் இதற்கானப் பயிற்சியில் அணில்குமாரால் தேர்ச்சி பெறமுடியவில்லை. இதன்பின்னர் கோரக்பூரில் இரண்டு முறை பயிற்சிக்கு பின் தேறியவரை பரேலியில் பிலாரி காவல்நிலையத்தில் பணிக்கு அமர்த்தினர். அங்கு கடுமையான பணியை அணில்குமாரால் செய்வது சிரமமாக இருந்துள்ளது.

இதனால், தனக்கு பதிலாகதன் சகலையான சுனில்குமாரை ஆள்மாறாட்டம் செய்து காவலர் பணிக்கு அனுப்பியுள்ளார். இதற்காக அவருக்கு உயர் அதிகாரிகளுக்கு ‘சல்யூட்’ அடிப்பது உள்ளிட்ட பெரும்பாலான பயிற்சிகளையும் தனிப்பட்ட முறையில் அளித்துள்ளார். தனது உயர் அதிகாரிகளுடனும், காவல்நிலையத்திலும் இருப்பதை தவிர்க்கும்படியும் யோசனை கூறியுள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அவர் தனது கைப்பேசியின் வாட்ஸ்அப்பில் மாற்றிய சுயவிளம்பரப் படம் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதில் சுனில்அரசு கைத்துப்பாக்கியை பாலிவுட்நாயகர்கள் பாணியில் தூக்கிப் பிடித்து எடுத்த படங்களை பதிவிட்டிருந்தார். இதனால், அவர் மீது முராதாபாத் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்கு சகக்காவலர்கள் புகார் செய்துள்ளனர். இதன் மீது நடத்தப்பட்ட விசாரணையில் சுனில்குமார் போலியான காவலர் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் முராதாபாத் மாவட்ட எஸ்எஸ்பியான பவண் குமார் கூறும்போது, ‘போலீஸ் பயிற்சியை தன் சகலையிடம் நன்கு கற்ற சுனில்குமார் மீது எவருக்கும் சந்தேகம் எழவில்லை. அணில் குமாரின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து கடந்த நவம்பர் 2016ல் பணியில் இணைந்துள்ளார். பணிமாற்றல் உத்தரவில் புகைப்படம் பயன்படுத்தாததன் பலன், இக்குற்றத்திற்கு சாதகமாக இருந்துள்ளது. தனக்கு கிடைத்த ரூ.35,000 ஊதியத்தில் சகலையான அணிலுக்கு மாதம் ரூ.8.000 அளித்து வந்துள்ளார்’ எனத் தெரிவித்தார்.

தனது சகலை அணில் குமாரின் இடத்தில் பணியாற்றியதையும் ஏற்றுக்கொண்ட நிலையில் சுனில்குமார் நேற்று கைது செய்யப்பட்டார். இவரது சகலை யான அணில் குமாரையும் முராதாபாத் போலீஸார் கைது செய்தனர். பி.எட் கல்வி முடித்த அணில் குமார் முசாபர்நகரின் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர் பணி செய்து வந்திருப்பதும் தெரிந்துள்ளது. நாட்டின் எந்த மாநிலங்களிலும் நடைபெறாத இதுபோன்ற மோசடியால் உபி காவல்துறை விமர்சனங்களுக்கு உள்ளாகி விட்டது.

தலைப்புச்செய்திகள்