Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடைமடை வந்தது காவிரி நீர்: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

ஜுன் 20, 2021 01:07

திருவாரூர்: திருவாரூர்  மாவட்டத்தின் கடைமடையை காவிரி நீர் வந்தடைந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறுவை சாகுபடி பாசனத்துக் காக, மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து, 16-ம் தேதி கல்லணை திறக்கப்பட்ட நிலையில், கடந்த 18-ம் தேதியன்று வெண்ணாற்றின் வழியாக நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பை காவிரி நீர் வந்தடைந்தது.

திருவாரூர், நாகை மாவட்டங்களின் கடைமடை பகுதிகளுக்கு முக்கிய ஆறுகள் வழியாக காவிரி நீர் சென்றடைவதில் மூணாறு தலைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு திறக்கப்படும் தண்ணீர் பாமணி ஆறு, கோரையாறு, வெண்ணாறு எனப் பிரிந்து, திருவாரூர், நாகை மாவட்டங்களின் கடைமடை பகுதிகளுக்குச் சென்று கடலில் கலக்கிறது. அந்த வகையில் மூணாறு தலைப்பில் நேற்று மாலை நிலவரப்படி வெண்ணாற்றில் விநாடிக்கு 500 கனஅடி, கோரையாற்றில் 722 கனஅடி, பாமணி ஆற்றில் 210 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பாமணி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் சேரன்குளம் பகுதியைத் தாண்டி, முத்துப்பேட்டை பகுதியைச் சென்றடைந்தது.

அதேபோல, கோரையாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் முக்கிய பகுதிகளைக் கடந்து, கடைமடையான கோட்டூர் ஒன்றிய பகுதிகளுக்குச் சென்றடைந்தது. இதன் காரணமாக, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்