Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை விமான நிலையத்தில் சென்னை பொறியாளரிடம் சிக்கிய தோட்டாக்கள்

ஜுன் 21, 2021 11:27

மதுரை:  மதுரை விமான நிலையத்தில் சென்னை மாநகராட்சி பொறியாளர் ஒருவரிடம் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மாநகராட்சி கண்காணிப்புப் பிரிவில் பொறியாளராகப் பணிபுரிபவர் சக்தி மணிகண்டன்(56). சென்னை பெரியார் நகரில் வசிக்கிறார். திண்டுக்கல்லைச் சேர்ந்த இவர் அண்மையில் சொந்த ஊருக்கு வந்தார். விமானம் மூலம் சென்னை திரும்புவதற்காக அவர் தனது குடும்பத்தினர் 3 பேருடன் மதுரை விமான நிலையத்துக்கு நேற்று வந்தார்.

அப்போது அவரது உடமைகளை அலுவலர்கள் பரிசோதித்தனர். பை ஒன்றில் இரட்டைக் குழல் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் 4 பெரிய தோட்டாக்கள் இருந்தன. இதுகுறித்து அவரிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி சரவணன் விசாரணை நடத்தினார். அதற்கு, உரிமம் பெற்று இரட்டைக் குழல் துப்பாக்கி வைத்திருப்பதாகவும், அதில் பயன்படுத்தும் தோட்டாக்களை தெரியாமல் பையில் வைத்து எடுத்து வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், பெருங்குடி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார், பொறியாளரிடம் இருந்து தோட்டாக்களைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். அதே சமயம் அவரது குடும்பத்தினர் 3 பேரும் விமானத்தில் சென்னை சென்றதாகப் போலீஸார் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்