Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு ரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடு: உலக அளவில் 5-ம் இடம் என ஐ.நா. அறிக்கையில் தகவல்

ஜுன் 22, 2021 11:50

2020-ம் ஆண்டில் இந்தியா ரூ.4.74 லட்சம் கோடி மதிப்பிலான அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டின் உலக முதலீடுஅறிக்கையை ஐ.நா. வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

2019-ம் ஆண்டைக் காட்டிலும் 2020-ல் உலக அளவிலான அந்நிய நேரடி முதலீடு 35 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 2019-ல் 1.5ட்ரில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில் 2020-ல்1 ட்ரில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவைப் பொறுத்தவரை 2020-ம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு 2019-ம்ஆண்டைக் காட்டிலும் 27 சதவீதம்அதிகரித்துள்ளது. 2019-ல் 51 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில் 2020-ல் 64 பில்லியன் டாலர் (ரூ.4.74 லட்சம் கோடி) முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியா ஈர்த்துள்ள முதலீடு 5-வது பெரிய முதலீடு ஆகும்.

2020-ம் ஆண்டில் கரோனா பரவல் உலகம் முழுவதையும் முடக்கிப் போட்டது. உலக அளவில் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனால் முதலீடுகள் பெருமளவில் குறைந்துள்ளன. இந்தியாவிலும் கரோனா பாதிப்பு பொருளாதாரத்தில் பெரும் தடைகளை உருவாக்கியிருந்தது. அதிலிருந்து மீண்டு வருவதற்குள் 2021-ல் ஏற்பட்ட 2-ம் அலை காரணமாக மீண்டும் சில மாநிலங்களில் ஊரடங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பொருளாதாரம் கணிசமான பாதிப்புகளைச் சந்தித்தது.ஆனாலும், நாட்டின் பொருளாதாரத்தின் அடிப்படை காரணிகள் வலுவாக இருந்ததால் பிற நாடுகளை விடவும் அந்நிய முதலீடுகளின் தேர்வாக இந்தியா உள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும்தொலைத்தொடர்பு துறையில் காணப்பட்ட நிறுவன கையகப்படுத்தல்கள் காரணமாக 2020-ல்அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பு டிஜிட்டல் சேவைகளுக்கான தேவையை வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் அந்தத் துறையில் முதலீடுகளும் அதிகரித்தன. அமேசான், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் 2.8 பில்லியன் டாலர் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. ஜியோ தளங்களைக் கையகப்படுத்திய தன் மூலம் ஃபேஸ்புக் 5.7 பில்லி யன் டாலர் முதலீடு செய்துள்ளது.

2020-ல் ஆசிய நாடுகளில் செய்யப்பட்டுள்ள மொத்த அந்நிய நேரடி முதலீடு 4% உயர்ந்து 535 பில்லியன் டாலராக உள்ளது. இது வரலாறு காணாத வளர்ச்சியாகப் பதிவாகியுள்ளது. காரணம் ஒட்டுமொத்த உலக அந்நிய நேரடி முதலீடுகளில் ஆசியாவின் பங்கு 54 சதவீதமாக உள்ளது. கரோனா சார்ந்த பொருளாதார பாதிப்புகளை ஆசிய கண்டம் சமாளிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

இவ்வாறு ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்