Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உருமாறிய கொரோனாக்களில் “டெல்டா வைரஸ்” ஆபத்தானது

ஜுன் 22, 2021 12:19

சென்னை: உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பல உருமாற்றங்களை ஏற்படுத்திக்கொள்கிறது. அந்த மாற்றத்துக்கு ஏற்ப அதன் பரவும் தன்மை, வீரியம் ஆகியவற்றிலும் மாறுபாடு ஏற்படுகிறது. முதல் முதலில் கொரோனா வைரசின் உருமாற்றம் ‘ஆல்பா’ என்று கண்டறியப்பட்டது. இதுதான் பல நாடுகளிலும் பரவியது. இந்த நிலையில் இந்தியாவில் 2-வது அலை வேகமாக தாக்கியது. இதில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டது. இதற்கு உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் காரணம் என்பது தெரியவந்தது. B 1.617 என்ற இந்த வகை வைரஸ் இந்தியாவில்தான் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த உருமாறிய வைரஸ் தடுப்பூசி மற்றும் கொரோனா மூலம் உருவான நோய் எதிர்ப்பாற்றலை தாக்கி தன்னை பாதுகாத்துக் கொள்ள இந்த உருமாற்றத்தை எடுத்து இருக்கிறது. கடந்த 2 மாதங்களில் டெல்டா 80 சதவீதம் உருமாறி இருக்கிறது. இந்த வகை வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது. பிரிட்டனில் புதிதாக தொற்று ஏற்படுவதற்கு 91 சதவீதம் இந்த டெல்டா வகை வைரஸ்தான் காரணம் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஒவ்வொரு இரண்டு வாரங்களில் தொற்று எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்து வருகிறது. இந்த வகை வைரஸ் உலகம் முழுவதையும் தாக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் எச்சரித்துள்ளார். டெல்டா வைரஸ் வேகமாக பரவுவது மட்டுமல்ல உடலில் வேகமாக செல்களில் ஊடுருவும் தன்மை கொண்டது. இதுமேலும் 2 வகை பிறழ்வுகளை ஏற்படுத்தி கொள்கிறது. இவை இரண்டும் உடலை தாக்குவதற்கு உதவி செய்கின்றன. நோய் எதிர்ப்பாற்றலை குறைக்கும் வாய்ப்பு அதிகம்.

ஆல்பாவைவிட டெல்டா மிக தீவிரமான பாதிப்புகளை உருவாக்கும். இது தாக்கினால் ஆஸ்பத்திரி சிகிச்சை கட்டாயமாகிவிடும். உதாரணமாக ஆல்பா தாக்கிய ஒருவரிடம் இருந்து 4 முதல் 5 பேருக்கு பரவும். ஆனால் டெல்டா வகை 5 முதல் 8 பேருக்கு பரவும். மேலும் தொற்று ஏற்பட்ட 3 முதல் 4 நாட்களில் 12 சதவீதம் நோயாளிகளின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிடுகிறது. ஆனால் ஆல்பா வகை தாக்கத்தின் போது இந்த பாதிப்பு 2 முதல் 3 சதவீதமாகத்தான் இருந்ததாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்