Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் 2.21 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

ஜுன் 23, 2021 11:17

சென்னை: ஹைதராபாத்தில் இருந்து 2.21 லட்சம் தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தன. அவற்றை பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், அடுத்தகட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

மூன்றாவது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கடந்த மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் புனே சீரம் நிறுவனத்தில் உற்பத்தியாகும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடையே தயக்கம் இருந்த நிலையில், கரோனா தொற்று 2-வது அலை பரவத் தொடங்கியதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருப்பதால், மையங்களில் டோக்கன் விநியோகித்து, தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் பல மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் இருந்து 2.21 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னைக்கு நேற்று வந்தன. விமான நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், குளிர்சாதன வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்புக் கிடங்குக்கு அவற்றைக் கொண்டுசென்று, மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்துக்கு இதுவரை 1.32 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் 1.27 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. வீணாகியதுபோக 2 நாட்களுக்கான தடுப்புசிகள் கையிருப்பில் உள்ளன. இந்த மாதத்துக்கு வரவேண்டிய 42 லட்சம் தடுப்பூசிகளில், 26 லட்சம் தடுப்பூசிகள் தற்போது வந்துள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் தடுப்பூசிகள் வர உள்ளன. ஜூலை மாதத்துக்கு 71 லட்சம் தடுப்பூசிகளை வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தட்டுப்பாட்டைப் போக்க கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்'' என்றனர்.

தலைப்புச்செய்திகள்