Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 4 திருமண மண்டபங்களுக்கு அபராதம்

ஜுன் 23, 2021 11:20

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 4 திருமண மண்டபங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி நேற்று (ஜூன் 22) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இதில், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் 50 நபர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், திருமண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதளத்தின் வாயிலாக தெரியப்படுத்த மண்டப உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, இதுநாள்வரை 340 உரிமையாளர்களிடமிருந்து சுப நிகழ்ச்சிக்கு பதிவு செய்யப்பட்ட விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இந்தப் பதிவுகளின் அடிப்படையில் மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்கள் மேற்கொண்ட திடீர் ஆய்வில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 4 மண்டபங்கள் மற்றும் சுப நிகழ்ச்சியில் முகக்கவசம் அணியாத நபர்கள் என, மொத்தம் ரூ.10,520 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நபர்கள் கட்டாயம் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். மண்டப உரிமையாளர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும் என, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்