Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடந்த நிதியாண்டில் அதிகபட்சமாக நன்கொடை பெற்ற பா.ஜ.க.

ஜுன் 24, 2021 11:14

புதுடெல்லி: அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்படுவதில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவருவதற்காக தேர்தல் அறக்கட்டளை முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளைகள் மூலம் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை தாங்கள் விரும்பும் கட்சிகளுக்கு, விரும்பும் தொகையை வழங்கலாம். இவ்வழியில், கடந்த 2019-20-ம் நிதியாண்டில் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரத்தை தேர்தல் உரிமைகள் குழுவான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கட்சிகளிலேயே அதிகபட்சமாக பா.ஜ.க. ரூ.276.45 கோடியை 7 தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பெற்றுள்ளது. இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்ட தொகையில் 76.17 சதவீதமாகும். பா.ஜ.க.வுக்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் கட்சி ரூ.58 கோடி பெற்றுள்ளது. இது கட்சிகளுக்கான நன்கொடையில் 15.98 சதவீதம். இந்த 2 கட்சிகளைத் தவிர, ஆம் ஆத்மி, சிவசேனா, சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட 12 கட்சிகள் மொத்தமாக ரூ.25.46 கோடி நன்கொடை பெற்றுள்ளன.

ஜே.எஸ்.டபிள்யூ உருக்கு நிறுவனம், அப்போலோ டயர்ஸ், இண்டியாபுல்ஸ், டெல்லி சர்வதேச விமான நிலையம், டி.எல்.எப். குழுமம் ஆகியவை தேர்தல் அறக்கட்டளைகளுக்கு அதிகம் நன்கொடை வழங்கிய நிறுவனங்கள் ஆகும். அவற்றிலும், ஜே.எஸ்.டபிள்யூ. உருக்கு நிறுவனம்தான் அதிகபட்சமாக ரூ.39.10 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. கடந்த நிதியாண்டில் 18 தனிநபர்களும் தேர்தல் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளித்துள்ளனர்.

தேர்தல் அறக்கட்டளைகள் பெற்ற, கட்சிகளுக்கு வழங்கிய நன்கொடை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, கடந்த நிதியாண்டில் மொத்தமுள்ள 21 தேர்தல் அறக்கட்டளைகளில் 14 அறக்கட்டளைகள் அறிக்கை தாக்கல் செய்திருந்தன. அவற்றிலும் 7 அறக்கட்டளைகள்தான் நன்கொடை பெற்றதாக தெரிவித்துள்ளன.

தலைப்புச்செய்திகள்