Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை

ஜுன் 25, 2021 11:26

சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கு, வரும் 28-ம் தேதி முடிவுக்கு வரும் நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்ததால், கடந்த மே 24-ம் தேதி முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கு அடுத்தடுத்து 4 கட்டங்களாக ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 21-ம் தேதிகாலை முதல் மாவட்டங்கள் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டு, அதன்படி தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி, தொற்று அதிகம் உள்ள11 மாவட்டங்களில் ஏற்கெனவே இருந்த தளர்வுகள் தொடர்கின்றன. தொற்று குறைந்த 23 மாவட்டங்களில் கடைகள் கூடுதல் நேரம் திறக்க அனுமதி என்பது உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 3-வது வகையில் உள்ள சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், மாவட்டங்களுக்கு உள்ளும், இடையிலும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதுடன், பல்வேறுசேவைகளுக்கு இ-பதிவு வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், முழு ஊரடங்கு வரும் 28-ம் தேதியுடன் முடிகிறது. கரோனா தொற்றும் படிப்படியாக குறைந்து, நேற்று முன்தினம் நிலவரப்படி, தினசரி பாதிப்பு 6,596ஆகவும், உயிரிழப்பு 166 ஆகவும்உள்ளது. இதற்கிடையே, சென்னையில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றுகண்டறியப்பட்டுள்ளது. கரோனா 3-ம் அலை ஏற்படலாம் என்ற கருத்துகளும் வெளிவருகின்றன.

எனவே, அடுத்தகட்ட ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள், சிகிச்சை முறைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவினர், அரசு அதிகாரிகள், சிறப்பு பணிக் குழுவினருடன் இன்றுகாலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். இதைத் தொடர்ந்து, தொற்று குறைவின் அடிப்படையில் மாவட்டங்களை வகைப்படுத்தி, கூடுதல் தளர்வுகள், குறிப்பாக 23 மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்குதல் உள்ளிட்டவை பற்றி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்