Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூரில் முறைகேடாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் மூவர் கைது: போலி ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்

ஜுன் 25, 2021 11:28

திருப்பூர்: திருப்பூர்அம்மாபாளையம் ராக்கியாபாளையம் சாலை கணபதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், அனுப்பர்பாளையம் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் முன் பகுதியில், இருக்கும் இரண்டு வீடுகளை மாத வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு வீட்டில், கடந்த ஏப்ரல் மாதம் வங்கதேச காஜ்லா பகுதியை சேர்ந்த சிமுல் காஜி (29) என்பவர், ராக்கியாபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருவதாகவும், வீடு வாடகைக்கு கொடுக்குமாறும் கேட்டுள்ளார்.

திருப்பூரில் வாடகைக்கு குடியிருக்கும் வெளிநாட்டு நபர்களின் அடையாள அட்டையாக பாஸ்போர்ட், விசா போன்றவற்றை பெற்றுக்கொள்வது வழக்கம். ஆகவே பாஸ்போர்ட் மற்றும் விசா நகல்களை வழங்கும்படி மணிகண்டன் கேட்டுள்ளார். அவை பனியன் நிறுவனத்தில் இருப்பதாகவும், கரோனா தொற்று காலத்தால் நிறுவனம் மூடியுள்ளதாகவும், தற்போது தரமுடியாது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஆவணங்களை தராமல் வீட்டில் குடியிருந்து வந்தார்.

அவருடன் சைபுல் இஸ்லாம் (40), மன்னா முல்லா (31) ஆகிய இரு நபர்களும் தங்கி உள்ளனர். இவர்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில், இரண்டு மாதங்களாகியும் ஆவணங்கள் கொடுக்காததால், மணிகண்டன் நேற்று முன் தினம் வீட்டுக்கு சென்று, சிமுல் காஜியிடம் ஆவணங்களைக் கேட்டுள்ளார்.

அப்போது, இந்திய அரசால் வழங்கப்பட்ட ஆதார் கார்டை கொடுத்தார். இதனை பார்த்து மணிகண்டன் அதிர்ச்சியடைந்தார். வங்கதேசத்தை சேர்ந்த நபருக்கு எப்படி மேற்குவங்க மாநில முகவரியில் ஆதார் கார்டு வழங்க முடியும் என கேள்வி எழுப்பினார். மேலும் வங்கதேசத்தில் இருந்து வந்ததற்கான பாஸ்போர்ட் கொடுங்கள் என மணிகண்டன் அவர்கள் மறுத்துள்ளனர். இதில் அவருக்கு சந்தேகம் எழுந்து வீட்டை காலி செய்யுமாறு கூறினார். அப்போது வாடகையை மாதாமாதம் சரியாக தந்துவிடுகிறோம். பிறகு எதற்கு வீட்டை காலி செய்யச் சொல்கிறீர்கள் எனக் கேட்டு மணிகண்டனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுதொடர்பாக திருமுருகன்பூண்டி போலீஸார் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து போலீஸார் அவர்களை பிடித்து அனுப்பர்பாளையம் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்ததில், அவர்கள் முறைகேடாக இங்கு தங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து போலி ஆதார் அடையாள அட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். சிமுல் காஜி கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவும், சைபுல் இஸ்லாம் மற்றும் மன்னா முல்லா ஆகியோர் கடந்த பல ஆண்டுகளாகவும் திருப்பூரில் தங்கியிருப்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் முறைகேடாக தங்கியிருந்தது தொடர்பாக வெளிநாட்டினர் தடை சட்டம், கொலை மிரட்டல் உட்பட 7 பிரிவுகளின் கீழ், திருமுருகன்பூண்டி போலீஸார் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

தலைப்புச்செய்திகள்