Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.75 லட்சம் மோசடி- அதிகாரி கைது

ஜுன் 26, 2021 10:22

ஆவடி: திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகரில் வசிப்பவர் ரமேஷ்பாபு (வயது 50). இவர், ஆவடியில் உள்ள மத்திய அரசின் பாதுகாப்பு நிறுவனமான கனரக வாகன தொழிற்சாலையில்(எச்.வி.எப்.) அலுவலக சூப்பிரண்டாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் பெங்களூருவில் வசிக்கின்றனர்.

இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வேலை செய்வதால், அங்கு வேலை செய்யும் மற்றும் வேலையில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் என ஆவடி, பட்டாபிராம், கோவில்பதாகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் என பலரிடம் 2013-ம் ஆண்டு முதல் தனக்கு மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பல்வேறு உயர் அதிகாரிகளை தெரியும். அவர்கள் மூலம் உங்களுக்கு ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் மற்றும் கனரக வாகன தொழிற்சாலை உள்பட மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

இதனை நம்பிய பலர் இவரிடம் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கொடுத்தனர். ஆனால் சொன்னதுபோல் இதுவரை யாருக்கும் அவர் வேலை வாங்கி தரவில்லை. இதனால் பணத்தை கொடுத்தவர்கள் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாங்கி தரவேண்டும் அல்லது கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி நெருக்கடி கொடுத்தனர். இதனால் அவர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார். நேற்று மாலை பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி அருகே ரமேஷ்பாபுவை பார்த்த அவரால் பாதிக்கப்பட்ட சிலர், அவரை கையும் களவுமாக பிடித்து ஆவடியில் உள்ள அம்பத்தூர் காவல் மாவட்ட துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஆவடி பூம்பொழில் நகரைச் சேர்ந்த உத்தமராஜ் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் ரமேஷ்பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதுவரை இவரால் பாதிக்கப்பட்ட 20 பேர் வரை புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் நடத்திய விசாரணையில் ரமேஷ்பாபு இதுவரை மொத்தம் ரூ.75 லட்சம் வரை மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. மேலும் பலர் இவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து இருக்கலாம் என்றும் தெரிகிறது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்