Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை மண்டலத்தில் நாளை முதல் 834 அரசு பஸ்கள் இயக்கம்

ஜுன் 27, 2021 10:06

மதுரை: கொரோனா பொது முடக்கத்தால் அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள் நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன. மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்பட 27 மாவட்டங்களுக்கு இடையே நாளை முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை மாவட்டத்தில் உள்ள போக்குவரத்துக்கழக பணிமனைகளில் அரசு பஸ்களை இயக்குவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன.

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக மதுரை மண்டலம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களுக்குள் 50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மண்டலம் சார்பில் மதுரை மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே நகர பஸ்கள் 714 மற்றும் புறநகர் பஸ்கள் 120 என மொத்தம் 834 பஸ்கள் நாளை முதல் இயக்கப்படும். இவற்றில் மகளிர் இலவச பஸ்களும் உண்டு. குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் இயக்கப்படமாட்டாது.

பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள வழித்தடங்களில் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். இதனை கண்காணிப்பதற்காக பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய பஸ் நிறுத்தங்களில் சிறப்பு கண்காணிப்பு பணி அலுவலர்கள், பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து பஸ் நிலையங்களிலும் பயணிகளை தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யவும், கைகளை சுத்தம் செய்வதற்கு சானிடைசர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்