Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொளத்தூர் தொகுதியில் அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு- சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

ஜுன் 28, 2021 10:57

திரு.வி.க. நகர்: சென்னை கொளத்தூரில் பல முக்கிய சாலைகளில் வி.ஐ.பி. அந்தஸ்தில் உள்ள சிலர் ஆங்காங்கே அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பராமரித்து வருவதாகவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியில் நடைபெறும் இதுபோன்ற அரசு நிலம் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி மற்றும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டல அதிகாரி பரந்தாமன், செயற்பொறியாளர் செந்தில்நாதன் மற்றும் உதவி செயற்பொறியாளர் ரவிவர்மா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதில் கொளத்தூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் ரூ.70 கோடி மதிப்புள்ள சுமார் ஒரு ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, நிலத்தை சுற்றிலும் கல் நட்டு வைத்து இருப்பது தெரிந்தது. அந்த கல்லை அகற்றி, அரசு நிலத்தை மீட்ட மாநகராட்சி அதிகாரிகள், அந்த இடத்தில், “இது அரசுக்கு சொந்தமான நிலம். அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை பலகை வைத்தனர்.

இதேபோல் கொளத்தூர் வெல்டிங் ஷாப் பஸ் நிலையம் அருகில் முன்னாள் நீதிபதி ஒருவரின் பெயரில் தனிநபர்கள் ஆக்கிரமித்த ரூ.50 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தையும் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். தொடர்ந்து இதுபோல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள அரசு நிலங்கள் கண்டறியப்பட்டு மீட்கப்படும். அவ்வாறு மீட்கப்படும் நிலங்களில், மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் முறையாக பராமரிப்பு செய்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் பூங்கா, சமுதாய கூடம் அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்