Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மர்மநபர் கொடுத்த மாத்திரையை தின்ற மேலும் 2 பெண்கள் பலி - 2 பேரிடம் போலீஸ் விசாரணை

ஜுன் 28, 2021 10:58

சென்னிமலை: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கே.ஜி.வலசு பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் கருப்பண கவுண்டர் (வயது 75). இவருடைய மனைவி மல்லிகா (58). இவர்களுடைய மகள் தீபா (30). தீபாவின் கணவர் பிரபு. தீபாவும், பிரபுவும், கருப்பண கவுண்டர் வீட்டிலேயே வசித்து வந்தனர். பிரபுவுக்கு லோகித் என்ற மகனும், லட்சிதா என்ற மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் காலை சென்னிமலைக்கு பிரபு சென்றுவிட்டார். அப்போது மர்ம நபர் ஒருவர் கருப்பண கவுண்டர் வீட்டுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி கருப்பண கவுண்டர், அவரது மனைவி மல்லிகா, மகள் தீபா மற்றும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குப்பம்மாள் (65) ஆகிய 4 பேருக்கும் மாத்திரை கொடுத்துள்ளார். அவர்களும் அந்த மாத்திரையை வாங்கி சாப்பிட்டனர். ஆனால் அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அந்த பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் (43) என்பவர் ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்து விட்டதால் தனக்கு மாத்திரை தேவையில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் அவர் மாத்திரையை சாப்பிடவில்லை.

பின்னர் அந்த மர்ம நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதற்கிடையே மாத்திரை சாப்பிட்ட தீபாவுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், உடனே அவர் இதுபற்றி தனது கணவர் பிரபுவுக்கு தெரிவித்து உள்ளார். உடனே பிரபு வீட்டுக்கு காரில் விரைந்து சென்று மயங்கி விழுந்த கிடந்த கருப்பண கவுண்டர், மல்லிகா, தீபா, குப்பம்மாள் ஆகியோரை மீட்டு சென்னிமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் மல்லிகா பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து குப்பம்மாள், சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், கருப்பண கவுண்டர், தீபா ஆகியோர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குப்பம்மாள், கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தீபாவும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 2 பெண்கள் இறந்ததால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாத்திரை கொடுத்த மர்ம நபர் யார் என விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இதுதொடர்பாக கொலையாளியை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தும் தீவிர தேடுதல் வேலையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே கருப்பண கவுண்டரின் குடும்ப நண்பர் மற்றும் சென்னிமலை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரையும் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி சென்னிமலை அருகே உள்ள கருப்பண கவுண்டர் தோட்டத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
 

தலைப்புச்செய்திகள்