Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கம்

ஜுன் 28, 2021 11:02

சென்னை: கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அடிப்படையி்ல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இடையே பொது பஸ் போக்குவரத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தற்போது நோய்த்தொற்று குறைந்ததை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் கூடுதல் தளர்வுகளை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதனடிப்படையில் 4 மாவட்டங்களுடன் கூடுதலாக அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களையும் சேர்த்து மொத்தம் 27 மாவட்டங்களுக்கு இன்று காலை 6 மணி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் மாவட்டங்களுக்கு உள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள 19 ஆயிரத்து 290 பஸ்களில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 2 ஆயிரத்து 200 பஸ்களும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 365 பஸ்களும், விழுப்புரம் கோட்டம் 2 ஆயிரத்து 210, சேலம் கோட்டம் 513, கும்பகோணம் கோட்டம் ஆயிரத்து 592, மதுரை கோட்டம் ஆயிரத்து 300, நெல்லை கோட்டம் ஆயிரத்து 153 உள்பட 9 ஆயிரத்து 333 பஸ்கள் 27 மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதலாகவும் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக கவசம் அணிந்துவரும் பயணிகள், சமூக இடைவெளியை பின்பற்றி பஸ்களில் பாதுகாப்பான பயணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. பஸ்களும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு, அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு இன்று காலை 6 மணி முதல் பகல் மற்றும் இரவில் செல்லும் அரசு விரைவு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. அருகில் உள்ள மாவட்டங்களுக்கு விழுப்புரம், கும்பகோணம் உள்ளிட்ட கோட்டங்கள் சார்பாகவும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளுக்கு தேவையான டிக்கெட்டுகளை பெற கவுண்ட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்