Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்டா பிளஸ் வைரஸ், 3-வது அலையைத் தூண்டுமா? நிபுணர் விளக்கம்

ஜுன் 28, 2021 11:05

புதுடெல்லி: உலகம் எங்கும் இப்போது பரபரப்பாக பேசப்படுகிற வைரஸ், டெல்டா பிளஸ் வைரஸ். இந்த வைரசால் கடந்த வாரம் ஒருவர் மத்திய பிரதேசத்தில் உயிரிழந்துள்ளார். அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர் ஆவார். உலக அளவில் இந்த டெல்டா பிளஸ் வைரஸ் அலற வைக்கிறது.

இந்த டெல்டா பிளஸ் வைரஸ் தடுப்பூசி உள்ளிட்ட அவசர நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுப்பதாக உலக சுகாதார அமைப்புக்கான ரஷிய பிரதிநிதி மெலிடா வுஜ்னோவிக் கூறி உள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முக கவசம் அணிந்திருக்க வேண்டும். ஏனென்றால் டெல்டாவுக்கு தடுப்பூசி மட்டுமே போதாது. குறுகிய காலத்தில் இதை வீழ்த்துவதற்கு முயற்சி எடுக்க வேண்டும். இல்லையேல் இன்னொரு பொது முடக்கம் வரும்” என குறிப்பிட்டார்.

இந்த தருணத்தில் நிபுணரும், டெல்டா பிளஸ் பற்றி தடுப்பூசி தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவருமான டாக்டர் என்.கே.அரோரா கூறியதாவது:-

கொரோனா வைரசின் பிற மாறுபாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த வைரசுக்கு நுரையீரல் திசுக்களுடன் (மியூகோசல் லைனிங்) அதிக தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் இது சேதத்தை ஏற்படுத்துகிறதா அல்லது இல்லையா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த வைரஸ், மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தும் அல்லது இது மேலும் பரவக்கூடியது என்று அர்த்தம் கிடையாது.

டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கம், மேலும் பாதிப்புகளை அடையாளம் காணுகிறபோதுதான் தெளிவாகும். ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் ஒரு டோஸ் அல்லது இரண்டு டோஸ்களை போட்டவர்களுக்கு இந்த நோய் லேசானதாகத்தான் தோன்றுகிறது. நாம் இதை மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியதிருக்கிறது. அதன் பரவலையும் பார்க்கவேண்டும். இதனால் அது பரிமாற்ற திறனைக் கொடுக்கும்.

டெல்டா பிளஸ் வைரசால் இன்னும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால் பலர் அறிகுறியற்றவர்களாக இருக்கக்கூடும். ஆனால் அவர்கள் வைரசை சுமந்து சென்று, பரப்புகிறவர்களாக இருக்கிறார்கள். இந்த வைரசால் 3-வது அலையைத் தூண்ட முடியுமா என்று கேட்டால் அதை நாம் இப்போது கணிப்பது கடினம். பொதுவாக அலைகள் புதிய மாறுபாடுகள் அல்லது உரு மாறுதல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே இது ஒரு புதிய மாறுபாடு என்பதால் ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் இது 3-வது அலைக்கு வழிநடத்துமா என்பதை கூறுவது கடினம். அது 2 அல்லது 3 விஷயங்களைப் பொறுத்தது ஆகும்.

முதலில் கடந்த 3 மாதங்களாக கடுமையான 2-வது அலை ஏற்பட்டது. அது இன்னும் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த 8-10 நாட்களாக தினசரி பாதிப்பு என்பது 50 ஆயிரம் அளவில் உள்ளது. ஆனால் சில இடங்களில் இன்னும் பாதிப்புகள் வருகின்றன. எனவே இந்த அலை நிலை பெறவில்லை. 2-வது அலை மற்றொரு மாறுபாட்டிற்கான சமூகத்தின் பதிலளிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். 2-வது அலையில் மக்கள் தொகையில் எந்த விகிதத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைப் பொறுத்துத்தான் 3-வது அலை அமையும்.

பெரிய அளவில் மக்கள் பாதிப்புக்குள்ளாகிவிட்டால், அடுத்த அலையில் மக்கள் சாதாரணமாக ஜலதோஷம் போன்ற பாதிப்பையே அடைவார்கள். தீவிரமான நோயை அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தும் நோயை அடைய மாட்டார்கள்.

2-வது முக்கிய விஷயம் தடுப்பூசி. நாம் தடுப்பூசி போடுவதில் உள்ள விரைவான தன்மை முக்கியம். ஒரு டோஸ் தடுப்பூசிகூட பயனுள்ளதாக இருக்கும். நாம் திட்டமிட்டு, விரைவாக தடுப்பூசிகளை போட்டுவிட்டால், 3-வது அலை வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. தடுப்பூசியும், கொரோனா கால கட்டுப்பாடுகளும் அடுத்த அலைகளில் இருந்து நம்மை காக்கும். அடுத்த அலையைத்தணிக்கும். 3-வது அலை முதல் 2 அலைகளில் ஏற்படுத்தியதைப்போல சேதத்தை ஏற்படுத்தாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்