Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தவறாக வெளியிட்ட இந்திய வரைபடம் நீக்கம் - டுவிட்டர் இந்தியா நிறுவன இயக்குனர் மீது வழக்குப்பதிவு

ஜுன் 29, 2021 10:23

புதுடெல்லி: இந்தியாவின் புதிய டிஜிட்டல் விதிகளை கடைப்பிடிக்க மறுத்து வரும் டுவிட்டர் நிறுவனம் தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறது. இதற்கிடையே, இந்தியாவின் தவறான வரைபடத்தை வெளியிட்டு டுவிட்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளது.   டுவிட்டரின் இணையதளத்தில் வேலைவாய்ப்புகள் தொடர்பான பக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரையும், லடாக்கையும் காணவில்லை. அதற்குப் பதிலாக இந்த பகுதிகள் சேர்ந்து தனி நாடாகக் குறிக்கப்பட்டுள்ளது.  

டுவிட்டர் வெளியிட்ட இந்த தவறான வரைபடம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் டுவிட்டருக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். டுவிட்டருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவின் தவறான வரைபடத்தை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.  இந்தியாவின் வரைபடத்தை டுவிட்டர் நிறுவனம் தவறாக வெளியிடுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு லடாக் தலைநகரான லே-வை  சீனாவின் பகுதியாக டுவிட்டர் சித்தரித்து அதற்கு இந்தியாவின் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய வரைபடத்தை தவறாகக் காட்டியதாக டுவிட்டர் இந்தியா நிறுவன இயக்குனர் மீது உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, டுவிட்டர் இந்தியா நிறுவன இயக்குனர் மனீஷ் மகேஸ்வரி மீது புலந்த்சாஹர் பகுதியைச் சேர்ந்த பஜ்ரங்தல் தலைவர் நேற்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து டுவிட்டர் இந்தியா நிறுவன இயக்குனர் மனீஷ் மகேஸ்வரி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 505 (2) தொழில்நுட்ப சட்டம் 2008 பிரிவு 74-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்