Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தடகள வீராங்கனை ரேவதி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

ஜுலை 06, 2021 02:04

 மதுரை: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இந்தியாவில் இருந்து பல்வேறு பிரிவுகளில் திறமையான வீரர், வீராங்கனைகள் தேர்வாகி வருகின்றனர். அந்த வகையில், மதுரையை சேர்ந்த ரேவதி வீரமணி என்பவர் தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். ஒலிம்பிக்கிற்கான இந்திய தடகள அணியில் இடம்பெற்றுள்ள ரேவதி, 4 * 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்துகொள்ள தகுதிப் பெற்றுள்ளார். கடந்த 4ம் தேதி நடந்த தகுதிச்சுற்றில் 400 மீட்டர் போட்டியின் இலக்கை 53.55 விநாடிகளில் கடந்து ரேவதி சாதித்ததை அடுத்து, ஒலிம்பிக்கிற்கு தேர்வானார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள மையத்தில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்.

22 வயதான ரேவதி, சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ரேவதி, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர் ஆவார். 2ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்துவந்த அவர், 12ம் வகுப்பு படித்தபோது ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று திறம்பட ஓடியுள்ளார். ரேவதியின் திறமையை பார்த்த பயிற்சியாளர் கண்ணன், அடுத்தக்கட்ட போட்டிகளுக்கு தயார்படுத்தியுள்ளார். பின்னர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் மாநில, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றார். 'ஷூ' கூட இல்லாமல் வெறும் காலில் பயிற்சி பெற்ற ரேவதி, விளையாட்டு வீரர்களின் உச்ச கனவான ஒலிம்பிக்கில் தடம் பதிக்க உள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தடகளம், வாள்சண்டை, டேபிள் டென்னிஸ், பாய்மரப் படகு போட்டிகளில் தமிழகத்தில் இருந்து இதுவரை 11 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தத்தில் தடகள பிரிவில் இதுவரை 26 இந்திய வீரர் - வீராங்கனைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், ஆண்கள் பிரிவில் 17 பேரும், மகளிர் பிரிவில் 9 பேரும் அடங்கும். தமிழகத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள், 2 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

மதுரை தடகள வீராங்கனை ரேவதி வீரமணி பங்கேற்கும் 4 * 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் அவருடன் சேர்ந்து திருச்சி தனலெட்சுமி, சுதா வெங்கடேசன் ஆகியோரும் பங்கேற்கின்றனர். 4 * 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆடவர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த ஆரோக்கிய ராஜிவ், நாகநாதன் பாண்டி ஆகியோரும் பங்கேற்கின்றனர். மேலும், தமிழகத்தில் பிறந்து வெவ்வேறு மாநிலங்களில் குடிபெயர்ந்த 3 வீரர் - வீராங்கனைகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்