Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி: சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிஷப் ஹீபர் கல்லூரிப் பேராசிரியர் பாலியல் புகாரில் கைது

ஜுலை 07, 2021 04:56

திருச்சி: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது ஐந்து வழக்குகள் பதியப்பட்டதோடு, இன்று அதிகாலை ஸ்ரீரங்கம் போலீஸார் அவரை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறார்கள்.

பிஷப் ஹீபர் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் கல்லூரி மாணவிகள் ஐந்து பேர், தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது கல்லூரி முதல்வரிடம் பாலியல் புகார் தெரிவித்தனர். மேலும், அவர் தங்களிடம் தவறாக நடந்துகொள்வது பற்றிக் கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தில் ஒரு பெண் உதவிப் பேராசிரியை பற்றியும் குறிப்பிட்டிருந்தார்கள். அதில், `பால் சாரைப் பார்க்கச் செல்கையில் முகம் கழுவி, மேக்கப் போட்டுக்கொண்டு தான் போகவேண்டும்’ என்று வற்புறுத்துவார் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணைக்குழு உறுப்பினர்களான வக்கீல் ஜெயந்தி ராணி தலைமையிலான குழுவினர், தமிழ்த்துறைத் தலைவர் பால் சந்திரமோகன், உதவிப் பேராசிரியர் நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து அதன் அறிக்கையை, கல்லூரி முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து பால் சந்திர மோகனைக் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமலிருக்க ஒரு குழுவையும் நியமிக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். இதையடுத்து கல்லூரிப் பேராசிரியர் சந்திரமோகன் மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, திருச்சியில் சில அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில் ஒரு வாரகாலம் சமூகநலத்துறை அலுவலர் தமூம்னிசா தலைமையில் விசாரணை நடைபெற்றது. பேராசிரியர் பால் சந்திரமோகனிடமும் கல்லூரி மாணவிகளிடமும் விசாரணை நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்தார் தமூம்னிசா.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், பால் சந்திரமோகன் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ததோடு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பால் சந்திரமோகனை இன்று அதிகாலை அதிரடியாகக் கைதுசெய்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்