Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

30 ஆண்டுகளாக மயானத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகள், கடைகள் அகற்றம்

ஜுலை 08, 2021 04:09

உசிலம்பட்டி :  பேரையூர் அருகே 30 ஆண்டுகளாக மயானத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகள், கடைகள் இடித்து அகற்றப்பட்டன. பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்திற்குட்பட்டது சாப்டூர் வடகரைப்பட்டி. இவ்வூரின் சாப்டூர்- பேரையூர் சாலையில் சதுரகிரி மகாலிங்கம் கோயில் அறங்காவலர்கள் உறவின்முறைக்கு சொந்தமான மயானமும், சாப்டூர் மக்களுக்கு சொந்தமான மயானமும் உள்ளது. இங்கு இறந்தவர்களை குழி தோண்டி புதைத்து வந்தனர்.

காலப்போக்கில் மயானம் முழுவதையும் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வீடுகளை கட்டியிருந்தனர். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பும், சில மாதங்களுக்கு முன்பும் இறந்தவர்கள் உடலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மயானத்தில் புதைக்க வந்தனர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள், இறந்தவர்கள் உடலை இங்கு புதைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய்த்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

தொடர்ந்து இதுகுறித்து அறங்காவலர்கள் உறவின்முறையினர் உசிலம்பட்டி ஆர்டிஓ ராஜ்குமாரிடம் புகார் மனு அளித்தனர். அதன்படி நடத்திய விசாரணையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி, வருவாய் ஆவணங்களில் பொது மயானம் என இருப்பது உறுதியானது. இதையடுத்து ஆர்டிஓ ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் இதனை ஏற்று கொள்ளாமல் அறங்காவலர்கள் உறவின்முறையினர், வருவாய்த்துறையினர் மீது ஐகோர்ட் மதுரை கிளையை நாடி அவசர வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிபதி இவ்வழக்கை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்து ஆர்டிஓ, வருவாய்த்துறையினரை விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார். பின்னர் இது சம்பந்தமான ஆவணங்களை சரிபார்த்து ஆர்டிஓ, மாவட்ட கலெக்டருக்கு விளக்க கடிதம் அனுப்பினார். தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் புகாரையடுத்து மேலும் விசாரணை செய்த போது வருவாய் ஆவணத்தில் பொது மயானம் இருப்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டது. பின்னர் ஆர்டிஓ நீதிமன்ற உத்தரவுப்படி மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு பலமுறை அவகாசம் கொடுத்தும், ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை. இந்நிலையில் நேற்று பேரையூர் தாசில்தார் சாந்தி, துணை தாசில்தார் வீரமுருகன், ஆர்ஐ மாரியப்பன், விஏஓ அமுதா ஆகியோரது தலைமையில் பேரையூர் டிஎஸ்பி சரோஜா, இன்ஸ்பெக்டர் ராஜசுலக்‌ஷனா தலைமையிலான போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளான கடைகள், வீடுகள் ஜேசிபி இயந்திரம் மூலம் முற்றிலும் அகற்றப்பட்டது. 

தொடர்ந்து மீட்கப்பட்ட இந்த இடத்தை, வீடுகளே இல்லாதவர்களுக்கு சாப்டூர் ஊராட்சி மன்றம் மூலம் குடியிருப்பதற்கான வீட்டுமனை வழங்க ஆர்டிஓ ராஜ்குமார் உத்தரவிட்டார். போலீசாரை குவித்து சுமார் 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த மயானம் மீட்கப்பட்டது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்புச்செய்திகள்