Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வலுவான கூட்டணியில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

பிப்ரவரி 02, 2019 03:07

நாகர்கோவில்: குமரி மாவட்டத்திற்கு 19-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான பந்தல் அமைக்கும் பணியும், கால்கோல் விழாவும் இன்று நடந்தது. 

மத்திய மந்திரி பொன். ராதா கிருஷ்ணன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:- பாரதீய ஜனதா ஆட்சியில் தாக்கலான பட்ஜெட் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது ஆரம்பத்தில் எக்காளம்மிட்ட எதிர்க்கட்சிகள் இறுதியில் சோர்ந்துபோய் படுத்து விட்ட காட்சிகளை மக்கள் பார்த்தார்கள். 

இந்த பட்ஜெட்டை மலிவான பட்ஜெட் என்று கூறியவர்கள் மலிவாகி போனவர்கள். நாட்டு மக்கள் நலன் கருதி இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. மக்களுக்கு நல்லது செய்தால் இவர்களால் சகித்துக் கொள்ள முடியாது என்பதை காங்கிரசும், மற்ற எதிர்க்கட்சிகளும் நிரூபித்துள்ளது. 

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி நாடு முழுவதும் 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். மீண்டும் வலிமையான ஆட்சியை மத்தியில் அமைப்போம். தமிழகத்திலும் வலிமையான கூட்டணி அமையும். அதில், பாரதீய ஜனதா கட்சி அங்கம் வகிக்கும். தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போதும் கூட்டணிக்கு பாரதீய ஜனதா தலைமை தாங்கும் என்று கூறவில்லை. இப்போதும் நாங்கள் அதையேதான் கூறுகிறோம். 

தமிழகத்தில் அமையும் கூட்டணியில் பாரதீய ஜனதா அங்கம் வகிக்கும். அந்த கூட்டணி வலிமையான கூட்டணியாக அமையும். இந்த கூட்டணி தமிழகத்தில் 30 தொகுதிகளில் வெற்றி பெறும். அ.தி.மு.க. கட்சியில் அனைத்து தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்குகிறார்கள். அது அந்த கட்சியின் உரிமை. அதை அவர்கள் செய்கிறார்கள். 

தமிழகத்தில் 3-வது அணி அமையுமென்று தம்பித்துரை கூறி உள்ளது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும். குமரி மாவட்டம் வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டப்போவதாக காங்கிரசார் கூறுகிறார்கள். அவர்களே கருப்பாக இருக்கிறார்கள். குமரி மாவட்டம் வரும் பிரதமர் இங்கு முடிவுற்ற பணிகளையும், புதிய திட்டங்களையும் தொடங்கி வைப்பார். துறைமுகம் பற்றி இப்போதுநான் எதுவும் கூறுவதற்கில்லை என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்