Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பசுபதி குமாருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி:  சிராக் பஸ்வான் கடும் எதிர்ப்பு

ஜுலை 08, 2021 05:56

புதுடெல்லி: லோக் ஜன்சக்தி கட்சித் தலைவரும், ஒன்றிய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான், கடந்த ஆண்டு உடல் நலக் குறைவால் காலமானார். இக்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 6 எம்.பி.க்கள் உள்ளனர். ராம்விலாஸ் பஸ்வான் மறைவையடுத்து, கட்சியின் தலைவரான அவரது மகன் சிராக் பஸ்வான் தலைமையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை லோக் ஜன்சக்தி எதிர்கொண்டது.

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியில் இடம் பெறாமல் லோக் ஜனசக்தி தனித்து போட்டியிட்டது. பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தாமல் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு எதிராக மட்டுமே வேட்பாளர்களை லோக் ஜனசக்தி நிறுத்தியது. தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி சொற்ப வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லாலு யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தோல்விக்கு சிராக் பஸ்வானே முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.

இதனிடையே, சிராக் பஸ்வானுக்கு எதிராக அவரது சித்தப்பாவும், எம்.பி.யுமான பசுபதி குமார் பராஸ் உள்பட 5 எம்.பி.க்கள் திடீரென போர்க்கொடி தூக்கினார். லோக் ஜன்சக்தி கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து சிராக் பஸ்வானை நீக்கக் கோரி அவர்கள் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், சிராக் பஸ்வான் நீக்கப்பட்டு அப்பதவிக்கு பசுபதி குமார் அங்கீகரிக்கப்பட்டார். தொடர்ந்து, லோக் ஜன்சக்தி கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் சிராக் பஸ்வான் நீக்கப்பட்டார். இதேபோல், சிராக் பஸ்வானின் ஆதரவாளர்கள் பசுபதி உள்ளிட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கினர்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தில், பசுபதி குமார் பராஸ் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இதற்கு சிராக் பஸ்வான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமக்கு கிடைக்க வேண்டிய அமைச்சர் பதவியை அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பசுபதி குமார் பராஸுக்கு கொடுத்ததால் சிராக் பஸ்வான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் குழு தலைவராக அவரை அங்கீகாரம் செய்ததை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்