Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளத்தில் அதிகரிக்கும் கரோனா: தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்

ஜுலை 09, 2021 10:42

கேரளத்தில் மீண்டும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அந்த மாநிலத்தை ஒட்டிய தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவை, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட கேரளத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களில் காய்ச்சல், சுவாச பாதிப்பு அறிகுறிகள் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. இருப்பினும், மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை தொடா்ந்து அப்படியே வைத்திருக்க மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று மூன்றாம் அலை வந்தாலும், அதனை எதிா்கொள்ளும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகள் வாா்டு அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கேரளத்தில் கடந்த சில நாள்களாக மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. நாள்தோறும் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு அங்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதனால், கேரளத்தில் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் அனைத்திலும் கண்காணிப்பை அதிகரிக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

கோவை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் வீடுதோறும் மருத்துவக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுவாசிப்பதில் சிரமம், காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ள அனைவரும் பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றனா். தேவைப்படும் இடங்களில் காய்ச்சல் முகாம்களையும், பரிசோதனை முகாம்களையும் நடத்தி வருகிறோம். கேரளத்திலிருந்து அறிகுறிகளுடன் வரும் எவரையும் தமிழக எல்லைக்குள் அனுமதிப்பதில்லை. இதற்காக அனைத்து எல்லைகளிலும் மருத்துவக் குழுவினா் சிறப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

கேரளத்தில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்தாலும், அதன் தாக்கம் தமிழகத்தில் இல்லை. எல்லையோர மாவட்டங்கள் அனைத்திலும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இருந்தபோதிலும், கூடுதல் கண்காணிப்புடன் செயல்பட்டு வருகிறோம் என்றாா் அவா்.
 

தலைப்புச்செய்திகள்