Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க தமிழகத்துக்கு ரூ.183 கோடி நிதி- மத்திய அரசு விடுவிப்பு

ஜுலை 09, 2021 12:28

புதுடெல்லி: வரவை விட செலவு அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு, இவ்விரண்டுக்குமான இடைவெளியை ஈடுகட்டுகிற வகையில் மத்திய அரசு நிதி மானியம் வழங்கும். இது வருவாய் பற்றாக்குறை மானியம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மானியத்தை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குவதற்கு இந்திய அரசியல் சாசனத்தின் 275-வது பிரிவு வழிவகை செய்துள்ளது. 15-வது நிதி கமிஷன் பரிந்துரை அடிப்படையில் இந்த மானியம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழகம், ஆந்திரா, அசாம், அரியானா, இமாசலபிரதேசம், கர்நாடகம், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் ஆகிய 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியம், 15-வது நிதிக்கமிஷன் பரிந்துரையின் பேரில்தான் 17 மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.

தற்போது இந்த 17 மாநிலங்களுக்கு 4-வது தவணையாக வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடியை மத்திய அரசு நேற்று முன்தினம் விடுவித்துள்ளது. இத்துடன் சேர்த்து இந்த நிதி ஆண்டில் மட்டும் 17 மாநிலங்களுக்கு ரூ.39 ஆயிரத்து 484 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 4-வது தவணையாக ரூ.183 கோடியே 67 லட்சம் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் தமிழகத்துக்கு இதுவரையில் ரூ.734 கோடியே 67 லட்சம் நிதி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. 4-வது தவணையாக கர்நாடகத்துக்கு ரூ.135 கோடியே 92 லட்சமும், கேரளாவுக்கு ரூ.1,657 கோடியே 58 லட்சமும் விடுவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

தலைப்புச்செய்திகள்