Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிழற்குடையில் சுவரொட்டி ஒட்டினால் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை

ஜுலை 09, 2021 12:51

சென்னை:பேருந்து நிறுத்த நிழற்குடைகள், தெருக்களின் பெயர் பலகைகளில் சுவரொட்டிகளை ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையின் பல்வேறு பகுதிகளில் அரசு, மாநகராட்சி கட்டிடங்கள், பேருந்து நிழற்குடைகள், பாலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மாநகரின் அழகை சீர்குலைக்கும் வகையில் உள்ளன. அதனால் அப்பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். இப்பணிகளை மாநகராட்சி பொறியியல் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

சாலைகளில் உள்ள தடுப்புகள் மற்றும் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளும் அகற்றப்பட உள்ளன. மாநகராட்சி பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகள், தெருக்களின் பெயர் பொறித்த பலகைகள் மற்றும் அரசு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ள சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தால், அதுகுறித்த தகவல்களை மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்