Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆவணங்கள் இன்றி ரெயிலில் கொண்டு சென்ற ரூ.1¼ கோடி வெள்ளிக்கட்டிகள், பணம் பறிமுதல்

ஜுலை 10, 2021 10:54

வேலூர்: ஆந்திராவில் இருந்து வரும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தங்கம், வெள்ளி ஆகியவை கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ரெயில்வே பாதுகாப்பு படையின் சென்னை கோட்ட குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரெயில் நிலையத்திற்கு வந்த அந்த ரெயிலில் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த ரெயிலில் இருந்த சேலத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 42), பிரகாஷ் (28), சுரேஷ் (35), நித்தியானந்தம் (35) ஆகியோர் வைத்திருந்த பைகளை போலீசார் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அப்போது அதில் 144 கிலோ வெள்ளிக்கட்டிகள், கொலுசுகள் மற்றும் கட்டுக்கட்டாக ரூ.32 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது. அவர்களிடம் வெள்ளி மற்றும் பணத்திற்கான போதிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனை தொடர்ந்து சட்டவிரோதமாக கொண்டு வந்ததாக போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். அதற்குள் ரெயில் வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது.

சேலத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் அவர்களிடம் இருந்த ரொக்கம், வெள்ளியை எடுத்துக்கொண்டு போலீசார் காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி மற்றும் பணம் ஆகியவை சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், சேலத்தை சேர்ந்த 4 பேரும் நகை பட்டறை வைத்துள்ளவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் வெள்ளி மற்றும் ரொக்கத்தை கடத்தி வந்தார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளியின் மதிப்பு ரூ.1 கோடியே 38 லட்சம் என கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்