Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவிலில் தீக்குளித்து தி.மு.க. தொண்டர் உயிர் காணிக்கை

ஜுலை 10, 2021 11:07

கரூர்: கரூர் மாவட்டம், லாலாபேட்டை பகுதியை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 60). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தி.மு.க.வின் தீவிர தொண்டரான இவர் நேற்று காலை 11 மணி அளவில் கரூர் அருகே மண்மங்கலத்தில் உள்ள புது காளியம்மன் கோவிலுக்கு பெட்ரோல் கேனுடன் வந்தார். கோவிலில் சாமி கும்பிட்ட அவர் சிறிது நேரம் கழித்து, தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் ஓடிவந்து உலகநாதன் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில், பலத்த தீக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உலகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், இந்த முறை சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடிக்க வேண்டியும், செந்தில்பாலாஜி கரூர் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரானால் தனது உயிரை காணிக்கையாக செலுத்துவதாக இக்கோவிலில் வேண்டிக் கொண்டதும், அவரது வேண்டுதல் நிறைவேறியதால் ஆனி அமாவாசையையொட்டி நேற்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக உலகநாதன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில், தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என்றும், கரூர் தொகுதியில் செந்தில்பாலாஜி வெற்றி வாகை சூடி அமைச்சராக வேண்டும் என மண்மங்கலம் காளியம்மன் கோவிலில் வைத்திருந்த வேண்டுதல் நிறைவேறியதால் கோவிலில் வேண்டிக் கொண்டபடி உயிர் காணிக்கை செய்ததாக உருக்கமாக தெரிவித்துள்ளார். தி.மு.க. தொண்டரின் தற்கொலை சம்பவம் தி.மு.க.வினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்