Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கல்வராயன்மலையில் ட்ரோன் கேமரா பயன்படுத்தி கள்ளச்சாராயம் அழிப்பு

ஜுலை 10, 2021 12:38

கல்வராயன்மலை: கள்ளக்குறிச்சி எஸ்பி ஜியாவுல்ஹக் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு படைகள் அமைத்து கல்வராயன்மலை முழுவதும் கள்ளச்சாராயம் ஊறல்களை அழிப்பதும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்வது, கள்ளச்சாராயத்தின் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று எஸ்பி ஜியாவுல்ஹக் தலைமையில் சிறப்புப் படையினர் பறக்கும் கேமராவை பயன்படுத்தி கல்வராயன்மலை முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கல்வராயன்மலை எருக்கம்பட்டு கிராம ஓடையில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 பேரல்களில் சுமார் 3,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.மேலும் கொடுந்துரை ஓடையில் லாரி டியூப்பில் 350 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு அங்கேயே கொட்டி அழிக்கப்பட்டது.

இதே போல் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் பிரபாவதி தலைமையில் சென்ற சிறப்பு படையினர் நீலம்பள்ளம் ஏரிக்கரை அருகே முத்து என்பவருக்கு சொந்தமான ஒரு சின்டக்ஸ் டேங்கில் 400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் 2 லாரி டியூப்பில் 60 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றி சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர். கல்வராயன்மலையில் நேற்று மட்டும் சுமார் 3,400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களும், 410 லிட்டர், கள்ளச்சராயமும் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

15 பேரல்களில் 3,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்