![](admin/uploads/.5fd9a7f23473d1.48760371.jpg)
Friday, 28th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஹராரே: வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடந்தது. வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 468 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. லித்தன் தாஸ் 95 ரன், கேப்டன் மொமினுல் 70 ரன் எடுத்து அவுட்டாகினர். மக்முதுல்லா 150 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 4 விக்கெட்டும், டிரிபானோ, நியுவாச்சி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டெய்லர் 81 ரன்னிலும், கைடனோ 87 ரன்னிலும் அவுட்டாகினர் வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
192 ரன் முன்னிலை பெற்ற வங்காளதேசம் 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. வங்காளதேசம் ஒரு விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிக்ளேர் செய்தது. ஷட்மன் இஸ்லாம் 115 ரன்னும், ஷன்டோ 117 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையடுத்து, 477 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் பிரெண்டன் டெய்லர் அதிரடியாக ஆடி 73 பந்தில் 92 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. டொனால்டு டிரிபனோ மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார், கடைசி கட்டத்தில் முசாராபானி 30 ரன்கள் சேர்த்து அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில், ஜிம்பாப்வே அணி 256 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்டில் வங்காளதேசம் 220 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன், தஸ்கின் அகமது தலா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். ஆட்ட நாயகன் விருது மக்முதுல்லாவுக்கு வழங்கப்பட்டது.