Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீர்காழி வைத்தீஸ்வரன் கோயிலில் 3 ஏக்கர் குளம் ஆக்கிரமிப்பு: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜுலை 12, 2021 12:42

மயிலாடுதுறை, சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள யானை குளத்தில் ஆக்கிரமிப்புக்கள் கண்டறியப்பட்டால் அவற்றை சட்டப்படி அகற்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைத்தீஸ்வரன் கோவிலைச் சேர்ந்த சேகர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், உலகப் புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோவிலைச் சுற்றி, நீரை சேகரிக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் ஏராளமான குளங்கள் வெட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கோவில் யானைகளை குளிக்கச் செய்வதற்காக 4 ஏக்கர் பரப்பில் வெட்டப்பட்ட யானை குளத்தில், தற்போது 3 ஏக்கர் பரப்பு வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்புக்களை அகற்றக் கோரி பல முறை அதிகாரிகளுக்கும், முதல்வரின் தனிப் பிரிவுக்கும் புகார் மனுக்கள் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், இந்த ஆக்கிரமிப்புக்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கை மனுவை எட்டு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டது. மேலும், ஆக்கிரமிப்புக்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படி அவற்றை அகற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தலைப்புச்செய்திகள்