Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளிகளை தமிழகத்தில்  உடனே திறக்க வேண்டும்:  முதல்வருக்கு கோரிக்கை

ஜுலை 13, 2021 09:29

 

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருகிற 19-ந்தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. 

பொது போக்குவரத்து அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. திரை அரங்குகள், பள்ளிக்கூடம் போன்றவைகளுக்கு இன்னும் கட்டுப்பாடுகள் நீடிக்கிறது.  பள்ளிகள் 15 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருப்பதால், மாணவர்கள் வீடுகளில் முடங்கி இருக்கிறார்கள். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடப்பதால், குழந்தைகளின் கண்பார்வையும் பாதிக்கப்படுகிறது. இதனால்  பள்ளிகளை உடனே திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் வலியுறுத்துகின்றன.

12 தனியார் பள்ளி சங்கங்கள் ஒருங்கிணைந்து தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பை உருவாக்கி உள்ளது. அதன் தலைவர்கள் பி.டி.அரசகுமார், ஜெயா கல்லூரி கனகராஜ், கே.ஆர்.நந்தகுமார், டி.என்.சி. இளங்கோவன் உள்ளிட்டவர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால்,  பள்ளிகளை படிப்படியாக திறக்க வேண்டும். முதலில் 9 முதல் 12 வகுப்புகளை திறக்க வேண்டும். புதுச்சேரியில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டுள்ளன. அதே போல தமிழகத்திலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க தனியார் பள்ளி நிர்வாகிகள் தயாராக இருக்கிறோம்.
பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். பெற்றோர்களும் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஆன்லைன் வகுப்பு நிரந்தர தீர்வாக இருக்காது. அதனால் விரைவாக பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு நேரடி கற்பித்தல் முறையை செயல்படுத்த வேண்டும். மாற்று சான்றிதழ் இல்லாமல் மாணவர்கள் சேர்ப்பதை கைவிட வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு நியாயமான கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

பள்ளி கட்டிடங்களுக்கு சொத்துவரி கட்டுவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சரை விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

தலைப்புச்செய்திகள்