Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நன்றாக இருக்கும் தமிழ்நாட்டை ஏன் பிரிக்க வேண்டும்?- நடிகர் வடிவேலு கருத்து

ஜுலை 15, 2021 10:45

சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகர் வடிவேலு சந்தித்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்தை வழங்கினார். பின்னர் அங்கிருந்த நிருபர்களுக்கு நடிகர் வடிவேலு அளித்த பேட்டி வருமாறு:-

மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சரை சந்தித்தது எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. குடும்பத்தில் ஒருத்தனாக நினைத்து மிகுந்த எளிமையுடன் பேசினார். தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்த பிறகு எனக்கு சினிமா வாய்ப்பு குறைந்ததாகவும் தற்போது தி.மு.க. ஆட்சி அமைத்துள்ள நிலையில் மீண்டும் அதிகமான திரைப்படங்களில் என்னை பார்க்கலாமா? என்று நீங்கள் கேட்டால், கண்டிப்பாக நல்லதே நடக்கும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் உலகமே உத்துப்பார்க்கிற அளவுக்கு செயல்பட்டுள்ளது. கொரோனா பரவலை தி.மு.க. அரசு கட்டுப்படுத்தியுள்ளது. மக்களுக்கு மெய்சிலிர்க்கும் விஷயம் அது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெருத்தெருவாகச் சென்று தடுப்பூசிக்காக கெஞ்சி கேட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அந்த வகையில் மக்களை தன்வசப்படுத்தினார்.

யாருடைய மனதும் புண்படாதபடி பேசி, மக்கள் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் அவர் செயல்பட்டது எங்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குடும்பத்தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய், இலவச பஸ் பயணத்திட்டம் ஆகியவற்றால் பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஒவ்வொரு திட்டங்களையும் அவர் அழகாக நிறைவேற்றி வருகிறார். உண்மையிலேயே மக்களுக்கு இது பொற்காலமான ஆட்சி.

முககவசத்தை சிலர் பொருட்படுத்துவதில்லை என்பது உண்மைதான். நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? ஏன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்? என்று சிலர் பேசினர். ஆனால் அப்படிப்பட்ட நிலையும் குறைந்து பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரிசையில் நிற்கின்றனர். இது மகிழ்ச்சியான விஷயம்.

நான் ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறேன். இது நன்மை தரும் விஷயம். எனவே அனைவருமே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். குழந்தைகள், குடும்பத்தை காப்பாற்ற இதுதவிர வேறு வழியில்லை. இதற்காக அரசு பல உதவிகளை செய்து வருகிறது. இது மக்களுக்கு நான் வைக்கும் அன்பான வேண்டுகோள்.

சினிமா தொழில் தற்போது ஒ.டி.டி. போன்ற அடுத்தகட்டத்திற்கு சென்றுவிட்டது. தொழில்நுட்பமும் வளர்கிறது. அடுத்ததாக ஒ.டி.டி. வேறு வடிவில் வரும். இப்படி சினிமாத்துறை மாறி போய்க்கொண்டே இருக்கும். காலத்திற்கு தகுந்தாற்போல் நாங்களும் நடித்துக்கொண்டே இருப்போம்.

கொங்கு நாடு என்று தனியாக பிரிக்க வேண்டும் என்று ஒரு பேச்சு போய்க்கொண்டிருக்கிறது. ‘ராம்நாடு, ஒரத்தநாடு’ என்று பல நாடுகள் உள்ளன. இதையெல்லாம் பிரிக்க முடியுமா? நன்றாக இருக்கும் தமிழ்நாட்டை ஏன் பிரிக்க வேண்டும்?

இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்