Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை- போலீஸ் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. உத்தரவு

ஜுலை 15, 2021 10:46

மதுரை: தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தென்மண்டல போலீஸ் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரிகளுடன் சட்டம், ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசியதாவது:-

தென் மண்டலத்தில் ரவுடிகள் மோதும் சில சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்பட கடுமையான சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகள் மீது உள்ள பழைய வழக்குகளை துரிதப்படுத்தி, அவர்கள் அதிகபட்ச தண்டணை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி, கஞ்சா கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தரம் பிரித்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பாக போலீஸ் நிலையத்திற்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆன்லைன் மூலமாக நிதி முறைகேடு செய்பவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் போலீசார் கண்ணியமாக நடந்து கொள்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். மகளிர் போலீஸ் நிலையங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். மனநிலையை அமைதிப்படுத்தும் வகையில் யோகா உள்ளிட்ட பயிற்சிகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.
 

தலைப்புச்செய்திகள்